Published : 17 Dec 2021 03:05 AM
Last Updated : 17 Dec 2021 03:05 AM

இந்தியா - பாகிஸ்தான் போரின் பொன்விழா கொண்டாட்டம்: போர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் அஞ்சலி

கடந்த 1971-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்ற 50-வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். படம்: க.பரத்

சென்னை: வெற்றி தினத்தின் பொன்விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பாகிஸ்தானுடன் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். இப்போரின் விளைவாக வங்கதேசம் விடுதலை அடைந்தது. இதையடுத்து, ஆண்டுதோறும் டிச.16-ம்தேதி வெற்றி தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது.

போரில் இந்தியா வெற்றி பெற்று50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, வெற்றி தினத்தின் பொன் விழாகொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, சென்னை காமராஜர்சாலையில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தென்பிராந்திய ராணுவ அதிகாரிஏ.அருண் உட்பட முப்படைகளின் உயர் அதிகாரிகளும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்று வீர்சக்ரா விருதுகள் பெற்ற ரியர் அட்மிரல் எஸ்.ராம்சாகர், ஏ.கிருஷ்ணசாமி ஆகியோரும் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, போர் நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 19-ம் தேதி வரை காலை10 முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது, போரில் உயிரிழந்த வீரர்களுக்கு பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தலாம்.

இந்நிகழ்ச்சி குறித்து தென்பிராந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜென்ரல் ஏ.அருண் கூறும்போது, ‘‘பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ஏராளமான வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து ஏராளமான வீரர்கள் இப்போரில் பங்கேற்றனர். வெற்றி தின பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி, போர் நினைவுச் சின்னம், பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து காண்பிக்க வேண்டும். இதன்மூலம், இளம் தலைமுறையினர், நமது வீரர்களின் தியாகத்தை அறிய முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x