Published : 17 Dec 2021 03:05 AM
Last Updated : 17 Dec 2021 03:05 AM

நீர்நிலைகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட்: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தலைமைச் செயலர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும். சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதிகாரிகளுக்கு தெரியும் என்பதால் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களின் கடமை.

அகற்றப்பட்ட பிறகும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

மேலும், மாவட்ட அளவில் குழுஅமைக்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு ஆலோசனையை நிராகரித்த நீதிபதிகள், ‘‘குழு அமைப்பதால் எந்த பயனும் இல்லை. இணையதளத்தில் சர்வே எண்ணை குறிப்பிட்டால் மட்டுமே நீர்நிலைகளின் விவரங்கள் தெரிய வருகிறது. அதனால், நீர்நிலைகள் குறித்த அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x