Published : 17 Dec 2021 03:05 AM
Last Updated : 17 Dec 2021 03:05 AM

பத்திரப்பதிவில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: பத்திரப் பதிவுத் துறையில் கடந்தகாலங்களில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து தமிழகஅரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

அரசுக்கு வருவாய் இழப்பு

சட்டப்பேரவையில் கடந்த செப்.6-ம் தேதி நடந்த பதிவுத் துறைமானிய கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘பதிவுத் துறையில் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ள பதிவு தவறுகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, போலியாகபதிவு செய்யப்பட்ட மற்றும் அரசுக்குவருவாய் இழப்பு ஏற்பட்ட இனங்களைக் கண்டறிந்து அறிக்கை அளிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும். இக்குழுவின் அறிக்கை அடிப்படையில் பதிவு தவறுகள் சரி செய்யப்பட்டு, தவறுசெய்தவர்கள் மீது சட்டப்பூர்வ மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும். 2021-22-ம் நிதியாண்டில் இதற்கான தொடரா செலவினம் ரூ.80 லட்சம், தொடர் செலவினம் ஆண்டுக்கு ரூ.2.20 கோடி ஆகும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பதிவுத் துறை தலைவர், கடந்த செப்.21-ம் தேதி அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், கடந்த காலங்களில் நடைபெற்ற பதிவுகளில் போலி ஆவணப்பதிவுகள் மற்றும் அரசுக்குவருவாய் இழப்பு ஏற்படுத்திய பதிவுகளைக் கண்டறிந்து அறிக்கை அளிக்கவும், அதன் அடிப்படையில் பதிவு தவறுகளைச் சரி செய்யும் நடைமுறைகளை பரிந்துரைக்கவும் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பதற்கான கருத்துருவை அரசுக்கு அனுப்பினார். இதைப் பரிசீலித்த அரசு, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிடுகிறது.

2 அடுக்குகளாக செயல்படும்

அதன்படி, இந்த சிறப்பு புலனாய்வுப் பிரிவு 2 அடுக்குகளுடன் கட்டமைக்கப்படுகிறது. இதில் முதல் அடுக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவாகும். இக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ்அதிகாரி இருப்பார். இரு உறுப்பினர்களில் முதல் உறுப்பினராக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மற்றொரு உறுப்பினர் பதிவுத் துறையின் கூடுதல் பதிவுத் துறை தலைவர் நிலையில் நியமிக்கப்படுவார். அவர், குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்.

இரண்டாம் அடுக்கு நிர்வாக அலகாகச் செயல்படும். சிறப்புக் குழுவின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி நடைபெறவும், அன்றாட நிர்வாக மற்றும் நிதி சார்ந்தநடவடிக்கைகளை நிறைவேற்றவும் குழுவின் பணிகளை ஒருங்கிணைக்கவும், உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு உடன் இருந்து உதவும் வகையிலும் நிர்வாக அலகு செயல்படும்.

சிறப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் கூடுதல் பதிவுத் துறை தலைவர், இந்தஅலகின் தலைவராகச் செயல்படுவார். இந்த நிர்வாக அலகு, மாவட்டப் பதிவாளர் நிலையில் உள்ள ஒரு அலுவலர், சார்பதிவாளர் நிலையில் உள்ள இருவர், ஐந்து உதவியாளர்கள், மூன்று தட்டச்சர்கள், ஒரு அலுவலக உதவியாளர் ஆகியோருடன் செயல்படும்.

கடந்த காலங்களில் பதிவுத் துறைநடைமுறைகளில், ஆள் மாறாட்டம், நிலமோசடி மூலம் நடைபெற்ற போலி ஆவணப்பதிவுகள், அரசு நிலங்கள் அபகரிப்பு, அரசுக்கு ஏற்படுத்தப்பட்ட வருவாய் இழப்புகள், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை பதிவு செய்தது, மற்றும்புலனாய்வுக் குழுவின் கவனத்துக்கு வரும் மற்ற விஷயங்கள் குறித்து இந்த குழு ஆய்வு செய்யும். இக்குழு 3 ஆண்டுகளுக்குச் செயல் படும்.

சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்

நடுநிலையான முறையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் இருந்து போலிஆவணப்பதிவு மற்றும் நில அபகரிப்பு குறித்த புகார் மனுக்களை பெற்று அவற்றின் மீது புலனாய்வுசெய்யும். மேலும், வருங்காலங்களில் தவறுகளை முற்றிலும் தவிர்க்கவும் இந்தக் குழு பரிந்துரைகள் வழங்கும். இவ்வாறு அரசாணை யில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x