

சென்னை: பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ரூ.125 கோடி செலவில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளைரூ.125 கோடி செலவில் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆடி மாதம் திருவிழா நடைபெறும் பொழுது லட்சக்கணக்கான மக்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக வருகிறார்கள்.
பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றநோக்கத்தோடு ரூ.19.99 கோடி செலவில் வரிசை மண்டபம், ரூ.15.26 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, ரூ.14.35 கோடியில் திருமண மண்டபத்துடன் கூடிய அன்னதானக் கூடம், ரூ.56 கோடியில் பக்தர்கள் தங்குவதற்கான அடுக்குகூடம் உள்ளிட்டவை கட்டப்படவுள்ளன.
மொத்தம் ரூ.125 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள வேண்டியபணிகள் தொடர்பான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அப்படங்களை பார்த்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளேன். அதன்படி சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
மேலும், வேப்பஞ்சேலை சாத்துகின்ற இடம், வாகனங்கள் நிறுத்துமிடம், இரவு தங்கி நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களுக்கு தங்கும் வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமிகோயிலில் ஆய்வு மேற்கொண்டோம். அங்குள்ள முகப்பு தோற்றத்தை கலை நயத்துடன் அமைக்கவும், அன்னதானக் கூடத்தை விரிவுபடுத்தவும், முடி காணிக்கை செலுத்த புதிய கட்டிடம் அமைக்கவும், கழிப்பறை வசதி ஏற்படுத்தவும், குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கவும் மதிப்பீடு தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பெருந்திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, அறநிலையத் துறை செயலாளர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.