கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் மையத்தில் 100 வயதைக் கொண்டாடிய பாட்டி

கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் மையத்தில் 100 வயதைக் கொண்டாடிய பாட்டி
Updated on
1 min read

கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் பராமரிப்பு மையத்தில் தனது நூறாவது வயதை மூதாட்டி ஒருவர் கொண்டாடினார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ஆதரவற்றோர் பராமரிப்பு மையம் நடத்தப்படுகிறது. கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மீட்கப்படும் ஆதரவற்றோர் இங்கு தங்க வைக்கப்படுகின்றனர்.

அவர்களது உறவினர்கள் குறித்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் விசாரித்து மீட்கப்பட்டவர்களை அனுப்பி வைக்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பின், அவர்களை கோவையில் உள்ள மன நலக் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது, அந்த மையத்தில் 21 பேர் தங்கியுள்ளனர்.

இதில், கோவை புலியகுளம் பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகே கடந்த 2014-ம் ஆண்டு மீட்கப்பட்ட ஜெபகனி என்ற மூதாட்டியும் ஒருவர். கடந்த 1916-ம் ஆண்டு, மார்ச் 4-ம் தேதி பிறந்த ஜெபகனி, தனது நூறாவது பிறந்த நாளை, பராமரிப்பு மையத்தில் கேக் வெட்டி உற்சாகத்துடன் அண்மையில் கொண்டாடியுள்ளார். அவருக்கு மையத்தில் தங்கியிருந்த ஏனைய ஆதரவற்றோரும், மையத்தின் அருகே வசித்து வரும் பொதுமக்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் நிறுவனர் பி.மகேந்திரன் கூறும்போது, ‘அந்த பாட்டிக்கு தற்போது நூறு வயது ஆகிறது. யாருடைய ஆதரவு இன்றி, 2014-ம் ஆண்டு புலியகுளம் பகுதியில் வந்து அமர்ந்து இருந்தார். அவரை போலீஸார், வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். என்னைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை எனத் தெரிவித்தவுடன், போலீஸார் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். நான் அவரை மீட்டு பராமரிப்பை மையத்துக்கு கொண்டு வந்தேன். எப்போதும் கலகலப்பாக நன்றாக பேசுவார்.

நல்ல ஞாபக சக்தி இப்போதும் உண்டு. தனது பிறந்தநாள் குறித்து அவர் நன்றாக தெரிந்து வைத்திருந்தார். அவரது பிறந்தநாள் குறித்து தெரிய வரவே, கடந்த 4-ம் தேதி ‘கேக்’ வெட்டி பொதுமக்கள் முன்னிலையில் கொண்டாடினோம். அவருக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. பொதுவாக நூறு வயதை எட்டியவர்களுக்கு 3-வது முறையாக பல் முளைக்கும் என்பார்கள். அது போலத்தான் அவருக்கு 3-வது முறையாக 3 புதிய பற்கள் முளைத்துள்ளன. ஆனால், மூட்டு தேய்மானம் காரணமாக அவரால் இப்போது நடக்க முடியவில்லை. வீல்சேரில் அமர்ந்தபடிதான் உள்ளார்’ என்றார்.

இது குறித்து பிறந்த நாளைக் கொண்டாடிய ஜெபகனி கூறும்போது, ‘கேரளத்தில் உள்ள பாலக்காடுதான் எங்களுக்கு சொந்த ஊர். அங்கிருந்து 37 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பிழைக்க வந்தோம். எனது கணவர் ராமச்சந்திரன் இறந்துவிட்டார். எனக்கு ஒரே மகள்தான். பேரன், பேத்திகள் இருக்கின்றனர். அவர்கள் என்னை பார்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்கய்யா. இவங்கதான் என்னை நல்ல பார்த்துக்கிறாங்க. என்னோட பிறந்தநாளுக்கு கேக் வாங்கி வந்து வெட்டச் சொன்னாங்க. சந்தோஷமா இருந்துச்சு’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in