Published : 16 Dec 2021 03:05 AM
Last Updated : 16 Dec 2021 03:05 AM

ஒரே பெர்மிட்டால் ஏற்படும் முறைகேட்டை தடுக்க கல்குவாரிகளில் புதிய நடைமுறையில் பெர்மிட்: எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை:

தமிழகத்தில் கல்குவாரிகள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் கிடைக்கவில்லை என்றும், குவாரிகளுக்கான பெர்மிட் வழங்குவதில் உள்ள புதிய நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்நேற்று வெளியிட்ட விளக்கத்தில்கூறியிருப்பதாவது:

முதல்வராக இருந்தபோது கனிமவளத் துறையை மொத்தமாக ஒருவருக்கே குத்தகைக்கு விட்டுவிட்டு, தற்போது இத்துறையைப் பற்றி யார் மூலமாகவோ தெரிந்து கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அறிக்கை விட்டிருப்பதே பெரிய விஷயம்தான்.

கல்குவாரி நடத்துபவர்கள் ஆண்டுக்கு எவ்வளவு யூனிட் ஜல்லி உற்பத்தி செய்யப் போகிறோம் என விரிவான சுரங்கத் திட்டம் மூலம்அரசுக்கு தெரிவித்த பின்னர்தான்அவர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு மொத்தமாக அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்ட யூனிட்களுக்கு அரசாங்கத்துக்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும். அந்த 12 மாதத்துக்கான யூனிட்களை மொத்தமாக கணக்கிட்டு அதற்குரிய தொகையை மாதாமாதம் செலுத்தி பெர்மிட் பெற்றுக் கொள்வது வழக்கமாகும்.

கல்குவாரி குத்தகைதாரர்களுடன் முந்தைய காலத்தில் ஏற்பட்ட தொடர்பால், 12 மாதத்துக்குரிய தொகை முழுவதையும் கட்டிவிடக் கூடாது, அரசுக்கு வருவாய் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்துக்கு ஒருமுறை பெர்மிட் வழங்குவது நடைமுறையில் இருந்தது. இந்த முறையில், 15 நாட்களுக்கான பெர்மிட்டில்,ஒரு குறிப்பிட்ட நாளுக்கான பெர்மிட்டையே 15 நாட்களுக்கும் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

முறைகேடு கண்டுபிடிப்பு

அவ்வாறு ஒரே பெர்மிட்டை வைத்து பலமுறை முறைகேடாக கனிமம் கொண்டு சென்ற வாகனங்களை சமீபத்தில், துறையின் இயக்குநரே நேரில் சென்று கைப்பற்றி, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்பட்ட பெர்மிட் முறை தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் உண்மையல்ல.

தற்போதைய நடைமுறை மாற்றம் என்பது, குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும் மொத்த பெர்மிட்டின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலஅவகாசம் 3 நாட்களுக்கு செல்லத்தக்க வகையில் பகுதி பகுதியாக மொத்தம் 15 நாட்களுக்கு ஒரே முறையில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, குத்தகைதாரர்கள் 3 நாட்களுக்கு ஒருமுறை அலுவலகத்துக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு துரைமுருகன் தெரி வித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x