Last Updated : 03 Mar, 2016 09:30 AM

 

Published : 03 Mar 2016 09:30 AM
Last Updated : 03 Mar 2016 09:30 AM

சாணக்கியனும் சமீபத்திய சபரீசனும்! - திமுகவில் இது புதிர்காலம்

அறிவாலயத்தில் கடந்த வாரத்தில் நாம் சந்தித்த ஒரு தொண்டர் சொன்னது... 'இந்தக் கச்சில நாப்பது வருஷமா இருக்கேன்.. இன்னிக்கு எனக்கு வயது 70. திருநெவேலிலர்ந்து வந்துர்க்கேன். ஒடம்பும் மனசும் என்னைய முடக்கப் பாக்குறப்பலாம் ஒரு வாட்டி.. ஒரேயொடு வாட்டி தலைவரு மொகத்த சன் டிவில பாத்துட்டா போதும். வீதில எறங்கி ஓடியாந்துருவேன். கச்சி வேலய்க்கு இன்னிக்கும் அசந்ததில்லை. தலைவரப் பாத்து.. இந்த வயசுலயும் அவர் அரசியல் பண்றதப் பாத்து.. சாணக்யத்தனத்தப் பாத்து.. கடய்தி தொண்டன் வரய்க்கும் பூரிச்சுக் கெடக்குறோம். வர்ற எலக்சன்ல டியெம்கே கண்டிப்பா ஜெயிக்கும்..'

இது ஒரு தொண்டனின் வெற்று வார்த் தைகள் அல்ல. திமுகவில் இருக்கும் லட்சோப லட்சம் தொண்டர்களையும் உற்சாகத்தில் வைத்திருக்கும் உணர்வு இது.

தலைமையையும் தலைமையின் செயல்பாடுகளையும் தொண்டர்களே உணர்ந்து கொள்ளக்கூடிய கட்சியாகவே திமுக இன்றளவிலும் இருக்கிறது. குடும்பமாகட்டும்; கட்சியாகட்டும்; தலைவர் என்ற முறையில் கருணாநிதி எடுக்கும் முடிவுகளும் அவர் காட்டும் அதிருப்திகளும்கூட தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலும் கட்சியினரால் கணிக்கப்பட்டு விடுகிறது.

சில நேரங்களில் ‘பல்ஸ்’ பார்க்க தலைவராலேயே பரப்பப்பட்டதாக சொல்லப் படும் ஓரிரு தகவல்களும்கூட அனைத்து ஊர்களிலும் மின்னல் வேகத்தில் பரவி பதற்றம் தொற்றிக் கொள்வதுண்டு. ஓரளவுக்கேனும் ஜனநாயகம் அந்தக் கட்சியில் இருப்பதே, இந்தளவுக்கு தகவல்கள் வெளியில் வந்து கொட்ட காரணமாக இருக்கலாம்.

தேர்தலை எதிர்நோக்கி முழுவீச்சில் களத்தில் இறங்கி இருப்பதோடு, அடுத்தது நம்முடைய ஆட்சிதான் என்ற நம்பிக்கையில் இருக்கும் திமுகவிலும் அதன்பால் இயங்கும் குடும்பத்திலும் என்ன நடக்கிறது? முக்கிய நிர்வாகிகள் பகிர்ந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் பழையன புதியன கலந்து இங்கே ஒரு படையல் --

ஒட்ட வைக்க முடியாத விரிசல்

அழகிரி என்றொரு மகன்.. அம்மாவைப் பார்க்க வந்தவரால் அப்பாவைப் பார்க்க முடியவில்லை. ‘நீயா போய்க் கால்ல விழு.. நீங்க சொல்றபடி நடக்க றேன்னு சொல்லு..’ என்று குடும்பத்தில் சொல்லப்பட்ட அறிவுரையை அவர் ஏற்காததால்.. விரிசலில் யாராலும் பசை போட முடியவில்லை. குடும்பப் பிரச்னைகளில் தலையிட்டு சமரசம் சேர்க்கும் செல்வியின் முயற்சியும் எடுபடவில்லை. தயாளு அம்மாளின் சுகவீனத்தால், குடும்பத்தில் யாரும் இந்த அப்பா - பிள்ளை விளையாட்டில் மூக்கை நுழைக்காமல் ஒதுங்கியே இருக்கிறார்கள். ஸ்டாலின் என்கிற மற் றொரு மகன் மீதான அலர்ஜி + அச்சமும் அந்த ஒதுங்கலுக்குக் காரணம்.

இயல்பில் பயந்த சுபாவம் கொண்டவராக இளவயதில் அறியப்பட்ட அழகிரி, தனது தவறான சேர்க்கை + செய்கைகளால் அஞ்சாநெஞ்சன் பட்டத்துடன் அதிகாரச் சேற்றில் விழுந்து இன்னமும் மீள முடியாமல் இருப்பது கண்கூடு. களவிலும் கலவரத்திலும் கைதேர்ந்த கும்பல்கள் கரைவேட்டியுடன் அழகிரியின் நிழலில் நின்று கொண்டு அரங்கேற்றிய அத்தனை அடாவடிகளும் கட்சிக்கு நாள்பட்ட கறையையும் களங்கத்தையுமே தந்திருக் கிறது. அதனாலேயே, அழகிரி மீது அஸ்திரம் பாய்ந்திருப்பதில் யாரும் சலனப்படவில்லை. மாறாக, மதுரைத் தொண்டன் மகிழ்ந்து போயிருக்கிறான். கட்சியை, கட்சித் தலைமையை மதிக்காத மகன் மீதான கருணாநிதியின் கண்டிப்பான நடவடிக்கையால் கட்சியின் இமேஜும் உயர்ந்திருக்கிறது. பாசம் ஒரு நாள் வெல்லும் என்று காத் திருந்தவர்களும் பொறுமை இழந்து, அழகிரியின் நிழலில் இருந்து ஒதுங்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஸ்டாலினை சோதித்தது போதும்

அழகிரி அரசியலோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஸ்டாலின் அரசியலில் குற்றம், குறை காண முடியவில்லை. தந்தையை தலைவராகவும் தனது அரசியல் ஆசானாகவும் ஏற்றுக் கொண்டு; அவர் விரல் காட்டும் வழியில் விவேகத்துடன் பயணிக்கிறார். அப்பா வாக கருணாநிதி அரங்கேற்றும் குடும்ப பொம்மலாட்டத்திலும் அறுந்து விழாத மகன் பொம்மையாக ஈடுகொடுக்கிறார். தேர்தலை மனதில்கொண்டு தொகுதி வாரியாகச் சுற்றி வந்தது; நேரம் காலம் பார்க்காமல் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துவது; வெகுஜன நட்பு பாராட்டுவது; கட்சி நிர்வாகிகளிடம் தேவைப்பட்ட நேரத்திலாவது இன்முகம் காட்டுவது என எத்தனையோ மாற்றங்கள். எல்லாமே அவரது தகுதியை வளர்த்திருப்பதோடு, கட்சியையும் சுறுசுறுப்பாக்கி இருக்கிறது. மக்களிடமும் பெரிய கவனம் பெற்றிருக்கிறது. இதற்கு மேலும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்காமல் ஸ்டாலினை கருணாநிதி சோதித்துப் பார்க்கக் கூடாது என்ற பேச்சு இயல் பாகிவிட்டது.

முட்டுக்கட்டை சந்தேகம்?

எந்த சுப வேளையிலும் அண்ணன் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதை நினைத்து நினைத்து அதற்கு ஸ்கெட்ச் போட்டுப் போட்டே ஓய்ந்து போகிறது ஸ்டாலின் தரப்பு. அதையும் தாண்டி ஸ்டாலின் அவ்வப்போது மன உளைச் சலுக்கு ஆளாவது தனிக்கதை. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகிறதோ.. என்ற கவலை அவரையும் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் வாட்டுகிறதாம். எல்லாமே தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற தனது எண்ணத்துக்கு தலைவர் + தகப்பன் ஸ்தானத்தில் இருந்துகொண்டு தொடர்ந்து கருணாநிதி முட்டுக்கட்டை போடுகிறாரோ என்ற சந்தேகம் ஸ்டாலி னுக்கு அவ்வப்போது எழுகிறது. அதன் பொருட்டு அப்பா - பிள்ளைக்குள் நிகழும் உரசல் ஊருக்கே தெரிந்து விடுகிறது.

குடும்பத்திலேயே தொகுதிப் பங்கீடு நடப்பது திமுகவில் மட்டும்தான் என்பதை கட்சி நன்கறியும். துண்டுச் சீட்டில் எல்லாருடைய விருப்பத்தையும் குறித்து வைத்துக்கொண்டு அதை கனகச்சிதமாக முடித்துக் கொடுப்பதில் தலைவர் கருணாநிதி வல்லவர். அவ ருக்கே அவ்வப்போது தண்ணி காட்டும் வேலையில் ஸ்டாலின் அணி இறங்கி விடுவதுதான் அவ்வப்போதைய உரசல் களுக்குக் காரணம்.

நேர்காணல் உஷார்

நேர்காணல் தொடங்கும்போதே குடும் பத்தில் கலாட்டாவும் தொடங்கிவிட்டது. நேர்காணல் வரிசையில் கனிமொழி அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஸ்டாலின் உத்தரவுப்படி ஐந்து பேர் மட்டுமே பட்டியலில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டனர். மகளிர் அணித் தலைவி என்கிற முறையிலாவது நானும் நேர்காணலில் பங்கு பெற வேண்டாமா? என்ற கனிமொழியின் கேள்வியை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதுவும் தவிர, நேர்காணலில் ஸ்டாலின் ஆதரவு விருப்ப மனுதாரர்கள் அத்தனை பேரும் மிகவும் தயாரான பதில்களுடன் வந்திருந்ததை கருணாநிதியால் யூகிக்க முடிந்தது.

ஸ்டாலினின் அடுத்த அஸ்திரம் அன்பான அறிவுரை பாணியில் அமலாகியிருக்கிறது. அதாவது -

ஊர் ஊராகப் போய் ஊழல் இல்லாத ஆட்சியை திமுக தரும் என்று நம்பிக்கை தந்துவிட்டு வந்திருக்கிறேன். அதனால் தேர்தல் முடியும் வரை 2ஜி விவகாரம் மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்றோரும் கட்சியின் சீனியர்கள் சிலரும் எந்த முக்கியமான நிகழ்ச்சிகளிலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே.

கனிமொழி விதிவிலக்கு

வழக்கமாக, தேர்தலுக்கு பிள்ளை யார்சுழி போடும்போதே மாறன் சகோதரர்களின் தயவு நாடப்படும். சில பல செலவுகளுக்கு பொறுப்பேற்கவும்; சில பல காரியங்களை கச்சிதமாக முடித்துக் கொடுக்கவும் மாறன் சகோதரர்கள் மற்றும் அன்னாரின் படையினர் மட்டுமே பயன்படுத்தப்படுவர். தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப அவர்களால் மட்டுமே சில காரியங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த முறை அவர்களின் நாளிதழ்கள் மற்றும் டி.வி. முழு வீச்சில் முன்கூட்டியே களமிறங்கி விட்டது.

ஏதாவது ஒரு விவகாரத்தில், காரியம் ஆக வேண்டும் என்றால், அடிமட்டத் தொண்டனாக இருந்தாலும் தலைவரே இறங்கி வந்து பேசுவார். ஆனால் காரியம் முடிந்ததும் அந்தத் தொண்டன் மனம் நோகும்படியோ அல்லது அவசரப்பட்டோ அவனை கழற்றிவிடத் துடிக்க மாட்டார். ஆனால், கருணாநிதி பாதம்தொட்டு அரசியலில் இறங்கிய அவருடைய குடும்ப வாரிசுகள் எல்லாருமே இந்தக் கழற்றி விடுதல் பாணியைக் கையாள்வதில் கைதேர்ந்தவர்கள் என்பது அறிவாலயம் அறிந்த உண்மை. அதில் கனிமொழி மட்டும் சற்று விதிவிலக்காகத் தெரிவது ஆச்சரியமான விஷயம்.

2ஜி விவகாரத்தில் சிக்கி சிறை சென்றதால் ஏற்பட்ட தயக்கமோ என்னவோ.. கட்சியில் உரிய முக்கியத்துவத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியாததாலோ என்னவோ.. கனிமொழி யின் அரசியல் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. அண்ணன், தம்பியிடம் ஏதோ ஒருவகையில் அவமானப்பட்டு கருணாநிதிக்காக கட்சியில் தொடரும் நிர்வாகிகள் பலரும் கனிமொழியை சந்தித்த பின்னர் அவரது பேச்சில் சற்று ஆறுதல் அடைகிறார்கள். பலமுறை பதவிக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் நினைவில் வைத்து ஓரிரு வார்த்தைகள் சிரித்துப் பேசி கட்சிக்காரனை தன்வசப்படுத்தி வைத் துக் கொள்வதில் கருணாநிதிக்கு நிகர் கட்சியில் யாரும் இல்லை. அந்த வெற் றிடத்தை கனிமொழி நிரப்புவதாக அந்த நிர்வாகிகள் நம்புகிறார்கள். அப்படிப் பட்ட கனிமொழியின் அரசியலும் அவ்வப் zபோது ஸ்டாலினால் தடைபட்டு விடுகிறது.

திமுகவின் புதிய புதிர்

இப்படி திமுகவில் குடும்பத்தினர் பலரின் ஆதிக்கம் இருப்பதுபோல தெரிந்தாலும், அத்தனையும் ஒரு தனி வழியில் அடைபடுகிறது என்பதே கட்சியை பரபரப்பாக்கியிருக்கும் முக்கியத் தகவல். எல்லாப் புகழும் சாணக்கிய னுக்கே என்ற நிலை மாறி.. சமீபத்திய சபரீசனுக்கே என்ற தோற்றம் உருவாகி யிருப்பதுதான் திமுகவில் புதிராகப் பார்க்கப்படுகிறது.

கட்சியிலும் சரி.. அதிகாரத்திலும் சரி.. பெரிய இடத்தில் இருக்கும் எல்லோருமே தங்களுக்கு அருகில் நம்பிக்கைக்குரிய சிலரை வைத்துக் கொள்வது யதார்த்தம். பத்திரிகையாளர் கூட்டத்தில் சபரீசன் பற்றிய கேள்விக்கு ஸ்டாலின் அதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். சட்டப்பேரவையையே புறக்கணிக்கும் அளவுக்கு சபரீசன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது.

சபரீசன் என்ன செய்கிறார்?

சபரீசன் தனக்கென ஒரு டீம் உருவாக்கி வைத்திருக்கிறார். அதில் மகேஷ் பொய்யாமொழி, மாஜி கவுன்சிலரின் மகன் கார்த்திக், அசன் முகமது ஜின்னா ஆகியோர் முக்கியமாக இருக்கிறார்கள். ‘நமக்கு நாமே’ டீம், இன்டர்நெட் டீம், சர்வே டீம் என ஏகத்துக்கும் டீம்கள் போடப்பட்டு அனைத்துக்கும் ஒருங்கிணப்பாளர் சபரீசன் தானாம். ‘நமக்கு நாமே’வில் தொடங்கி நேர்காணல், வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என எல்லாவற்றையும் சபரீசன் அன் கோ-தான் முடிவு செய்வதாகச் சொல்கிறார்கள்.

தேர்தல் பேச்சு ஆரம்பிக்கும்போதே அதிமுகவில் இருந்து வெளியே வந்திருந்த வைகோவின் பார்வை முதலில் திமுகவின் மீதுதான் படிந்தது. கருணாநிதிக்கும் விருப்பம் இருந்திருக்கிறது. ஆனால் பழைய ‘வெடி’ சம்பவப் பகையை மனதில் வைத்துக் கொண்டு சபரீசன் அன் கோ-வினர் ஸ்டாலின் மூலம் வைகோவின் வருகையைத் தடுத்துவிட்டதாக கட்சிக்காரர்களே சொல்கிறார்கள். ஏதோ ஒரு கணக்கில் சீட் கொடுத்திருந்தால் மூலைமுடுக்கெல்லாம் போய் கருணாநிதி புகழ் பாடியிருப்பார் வைகோ. அதை விட்டுவிட்டு பாலவாக்கம் சோமு உள்ளிட்ட சிலரை பிய்த்தெடுத்தது யாருக்கும் சரியாகப்படவில்லை. மதிமுகவில் இருந்து இழுக்கப்பட்டவர்களுக்கு சீட் கொடுக்க சபரீசன் அன் கோ முழு முயற்சி எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதன்மூலம் திமுகவில் உள்ள சீனியர்கள் அப்செட் ஆகியிருப்பதாகத் தகவல்.

விஜயகாந்த்தை திமுக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு முதலில் பேசப் போனது ஐசரி கணேஷ்; அடுத்து மகேஷ் என்கிறார்கள். ஸ்டாலினால் சபரீசன் மூலம் அனுப்பப்பட்டவர்கள் என்பதால் விஜயகாந்த் எந்தப் பேச்சுக்கும் இடம் கொடுக்கவில்லையாம். அதிலிருந்தே இழுபறி ஆரம்பித்திருக்கிறது. தலைவர் கருணாநிதி மூலம் பேசுவதை மட்டுமே இறுதியாக எடுத்துக் கொள்ள முடியும் என்று விஜயகாந்த் சொல்லி விட்டதாலேயே அடுத்தகட்ட பேச்சில் ஆட்கள் மாறியிருக்கிறார்கள். பொன் முடியின் சம்பந்தி பேசுவதாகச் சொல்லப்பட்டது... பின்னர் ஆற்காட்டார் பேசி அவரும் களைத்துப் போய்விட்டார் என்றார்கள்.

திமுக பக்கம் இருந்து திருமாவள வன் விலகவும் ஸ்டாலின் தரப்புதான் காரணம் என்கிறார்கள். லேட்டஸ்ட்டாக, திமுக அணிக்குள் நுழையப் பார்த்த சரத்குமாரையும் சபரீசன் அன் கோ அனுமதிக்கவில்லை. யார் வந்தாலும், ’நம்ம டீம் சர்வேப்படி அவருக்கு ஒண்ணும் செல்வாக்கு இல்லை. சேர்ப்பதில் நமக்கு எந்த லாபமும் இல்லை’ என்கிற ரீதியில் தகவல்களை பரப்பியே முட்டுக்கட்டை போட்டு விடுகிறதாம் சபரீசன் தரப்பு.

ஜி.கே.வாசன் மீது ஸ்டாலினுக்கு ஏற்பட்ட கோபத்தை வெளிக்காட்டவே, காங்கிரஸ் பிரவேசத்தை முதலில் அனுமதித்திருக்கிறார்களாம். ஆனால், அவசரப்பட்டு காங்கிரஸை உள்ளுக்குள் விட்டதை கட்சிக்காரர்களே ரசிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

பதவிப் பிரமாண வீடியோ

சபரீசன் அன் கோ எந்தளவுக்கு அட்வான்ஸ் ஆக இருக்கிறது என்பது பற்றி திமுக எம்எல்ஏ ஒருவரிடம் கட்சி யின் சீனியர் மாவட்டச் செயலாளர் சொன்னது -

‘‘3டி வீடியோவே தயார் பண்ணிருக் காங்களாம்ப்பா.. ஜெயிக்கப் போற எம்மெல்லேக்கள்னு சிலரை அதுல காட்றாங்களாம், அமைச்சருங்க வர்ற மாதிரி.. ஸ்டாலின் முதல்வரா பதவி ஏத்துக்கறப்ப மேடை எப்படி இருக்கணும்? பிரசாரத்தப்ப என்னென்ன டிரஸ் போட்டுக்கணும்; ஜெயிச்சதுக்கப்றம் எப்படி டிரஸ் பண் ணனும்? இன்னும் என்னென்னவோ அந்த வீடியோல இருக்குன்னு சொல்றாங்கப்பா..

அதுமட்டுமில்ல.. சென்னைல பெரும்பாலும் சபரீசன் அன் கோ-தான் சீட்ட புடிச்சுக்கும்னு சொல்றாங்க.. சீனியருங்கள அப்டியே ஒதுக்க இந்தப் பசங்க பக்காவா பிளான் போட்டுக் குடுத்துட்டாங்க.. ஒண்ணு மட்டும் மங்கலாத் தெர்யுது. திமுகவ ஆரம்பிச்ச வரோட சாதிசார்ந்த ஆட்கள்ட்டயே திரும்பவும் கட்சியோட கண்ட்ரோல் போயிடும்னு நெனய்க்கிறோம்.. திமுக தான் சுவாசம், வாழ்க்கைனு நெனச்ச பலர் எப்பமோ ஒதுங்கிட்டாங்க.. காலங்கள் மாறும்போது காட்சிகளும் மாறத்தானே செய்யும்!’’

இது இந்த தலைமுறை!

கட்சியில் சபரீசனின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறதா என்பது பற்றி இளைஞர் அணி பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம். 'முதல்வர் என்கிற அளவில் குஜராத்தில் மட்டும் பெயர் பெற்றிருந்த நரேந்திர மோடியை, பிரசார யுத்திகள் மூலம் மட்டுமே நாடறியச் செய்தார்கள். ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் மோடியின் பெயரால் பிஜேபி எழுச்சி பெறக் காரணம் ஊடகம், செல்பேசி, சமூக வலைத்தளங்கள் மூலம் நடந்த திட்டமிடப்பட்ட பிரசாரம் தான். இந்த தலைமுறைக்கு இது மிகவும் அவசியம் எனப்தை உணர்ந்தே. உதயநிதி, சபரீசன் போன்றோரை ஸ்டாலின் கட்சிப் பணியில் ஈடுபடுத்த விரும்பினார். ஆனால் சினிமா தயாரிப்பு, நடிப்பு என அந்தப் பக்கம் உதயநிதி பிஸியாகி விட்டார். அரசியல் பணிகளில் சபரீசனுக்கு ஆர்வம் இருப்பதால் அவரை முழுக்க இறக்கியிருக்கிறார். கருணாநிதி நம்பிக்கைக்கு ஒரு மருமகன் இருந்தது போல... எதிர்காலத்தில் ஸ்டாலினுக்கு சபரீசன் இருக்கட்டுமே.. என்றார் அவர்'

இணையத்தில் எதிரெதிர்!

2016-ல் ஸ்டாலினை சிஎம் ஆக்கணும்கிற இணையதள பிரச்சாரத்தை முதலில் தொடங்கியவர் மெல்வின், எட்வின் என்கிற இருவராம்.சபரீசன் அன் கோ இவர்களைத் தான் முதலில் ஓரங்கட்டியிருக்கிறார்கள். திமுக சார்பில் இவர்களைத் தவிர்த்து அறிவாலயத்தில் சபரீசன் அன் கோ ஒரு இணையதள பயிற்சிக் கூட்டம் நடத்தியது. இதற்கு இணையாக மெல்வின், எட்வின் குரூப்பும் பெரியார் திடலில் ஒரு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. இதைத் தடுக்க சபரீசன் அன் கோ எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. காரணம் போட்டிக் கூட்டத்தில் கருணாநிதியின் ஒப்புதலுடன் கனிமொழி கலந்து கொண்டதுதானாம்!

கூட்டணி சூட்சுமம்

திமுக தரப்பில் இருந்து விஜயகாந்துடன் அவர் பேசுகிறார்; இவர் பேசுகிறார் என்று வெளியில் பலவாறு தகவல்கள் பரப்பப்படுகின்றன. திருவள்ளூரில் பண்ணை வீட்டில் ஒரு வருடத்துக்கு முன்பே மாறன் தரப்பில் இருந்து பேச்சு நடத்தி ஒரு உடன்பாடு எட்டப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்கள். மலேசிய தொழில் அதிபர் ஒருவர் இந்த கூட்டணீப் பேச்சில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் சொல்லப்படுகிறது. கூட்டணி பற்றிய் அறிவிப்பை தாமதப்படுத்துவதன் பின்னணியில் ஏதோ சூட்சுமம் இருப்பதாகத் தெரிகிறது.

3 லிஸ்ட்... 3 சாய்ஸ்!

தொகுதிவாரியாக வேட்பாளர்களைத் தேர்வு செய்ய சபரீசன் அன் கோ 3 லிஸ்ட்களை தயார் செய்துள்ளது. ஒவ்வொரு தொகுக்கும் 3 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம்.

1. பத்திரிகையாளர் ஒருவர் தயார் செய்து கொடுத்தது.

2. சர்வே ஏஜென்சி மூலம் பெற்றது

3. மாவட்டச் செயலாளர்கள் மூலம் வாங்கப்பட்டது.

கூட்டணி இறுதியானபிறகு கருணாநிதி கேட்கும் கேள்விகளுக்கு திருப்திகரமாக பதில் சொல்லிச் சமாளித்து ஸ்டாலின் ஒப்புதலுடன் வெளியிட இறுதிப் பட்டியலும் தயாராக இருப்பதாகத் தகவல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x