

கிண்டி அரசு ஐடிஐ-ல் பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வரும் 31-ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிண்டி அரசு ஐடிஐ-ல், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவு படிப்புகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பிசியோதெரபி டெக்னீஷியன், ஸ்மார்ட்போன் டெக்னீசியன் கம் ஆப் டெஸ்டர், ஃபுட் புரொடக்சன் ஜெனரல், ஃபிரன்ட் ஆபீஸ் அசிஸ்டென்ட் ஆகிய படிப்புகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இதற்கான நேரடி மாணவர் சேர்க்கை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதியுள்ள மாணவர்கள் கிண்டி அரசு ஐடிஐ-க்கு நேரடியாக வருகை தந்து, சேர்க்கை பெறலாம். அவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சியுடன், பாடப் புத்தகம், சீருடை, வரைபடக் கருவிகள், லேப்டாப், சைக்கிள், பஸ் பாஸ் ஆகியவற்றுடன், மாதம் ரூ.750 உதவித்தொகையும் வழங்கப்படும்.
பயிற்சியை முடிப்பவர்களுக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். கூடுதல் விவரங்களுக்கு 94990-55649 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.