வரலாற்று சின்னங்கள் இடம்பெற்ற பெயர் பலகையில் மண்டலம், வார்டுகள் விவரங்களை குறிப்பிட கோரிக்கை

வரலாற்று சின்னங்கள் இடம்பெற்ற பெயர் பலகையில் மண்டலம், வார்டுகள் விவரங்களை குறிப்பிட கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: வரலாற்று சின்னங்கள் இடம்பெற்ற சாலை பெயர் பலகைகளில் மண்டலம், வார்டு உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதன் ஒரு பகுதியாக, சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் வரலாற்று சின்னங்களின் புகைப்படங்கள் அடங்கிய சாலை பெயர் பலகைகளை வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. ரூ.10 கோடி செலவில் முக்கிய சாலைகளில் உள்ள 5,000 பெயர் பலகைகள் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளன. முதற்கட்டமாக, சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை, கவிஞர் பாரதிதாசன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வரலாற்று சின்னங்கள் இடம்பெற்ற பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பெயர் பலகையில் தலைமை செயலகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், சாந்தோம் தேவாலயம், விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட சென்னையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், இவற்றில் மண்டலம், வார்டு, பகுதி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. எனவே, அவற்றை குறிப்பிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, பொதுமக்கள் சிலர் கூறியதாவது: சென்னையின் வரலாற்று சின்னங்கள் இடம்பெற்ற பெயர் பலகைகளை வைத்துள்ளது பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இருப்பினும், முன்பிருந்த பெயர் பலகையில் மண்டலம், வார்டு, பகுதி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்துதான் எந்த வார்டு, மண்டலத்தில் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வோம். குப்பைகளை அகற்றுவது, சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட புகார்களைத் தெரிவிக்க சென்னை மாநகராட்சியை தொடர்பு கொண்டால் கூட எந்த வார்டு, மண்டலம், பகுதி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு, ஒரு சிலவற்றுக்கு புகார் தெரிவிக்க மண்டலம், வார்டு உள்ளிட்ட விவரங்கள் பெயர் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது பயனுள்ளதாக இருந்தது. எனவே, வரலாற்று சின்னங்களுடன் மண்டலம், வார்டு, பகுதி உள்ளிட்ட விவரங்களையும் பெயர் பலகையில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in