

தமிழகத்தில் கோயில்களில் தணிக்கை பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தணிக்கை முடிவடையும் என உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
கோவை ஈஷா யோகா மையம் சார்பில் ஜெகதீஸ் வாசுதேவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கட்டிட அமைப்பு, நிலங்கள், கோவில்களின் அசையும், அசையா சொத்துக்கள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை, மக்களிடம் பெறப்படும் காணிக்கை தொகையின் நிலவரம் குறித்து வல்லுநர்கள் குழு அமைத்து தணிக்கைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்த மனுவில், கோவில்களில் தணிக்கை செய்வதற்காக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கோவில்களில் தணிக்கை பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தணிக்கை முடிவடையும் எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர் விசாரணையை ஜன. 12-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.