

வேலை வாய்ப்பை உருவாக்கி, வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழுள்ள தொழிலாளர் அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி இந்தியாவில் தற்போதைய வேலைவாய்ப்பு பல்வேறு துறைகளில் பின்தங்கியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்குவோம் என்று பாஜகவினர் கூறினர். ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு, இதுவரை தொழில்துறையில் நம் நாடு முன்னேற்றம் காணவில்லை.
மேலும், ஏற்கெனவே படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பதும், தற்போது படிக்கின்ற பட்டதாரி இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்காமல் இருப்பதும் நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும். 2013-14 ஆம் ஆண்டுகளில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால், 2015-ம் ஆண்டில் பாஜக ஆட்சியில் கடந்த ஆண்டுகளில் இருந்த வேலை வாய்ப்பை ஒப்பிடும்போது 50 சதவீத வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது.
நாட்டின் முக்கிய தொழில்களான டெக்ஸ்டைல், கைத்தறி, ஆட்டோமொபைல், கனரக வாகன உற்பத்தி, நகைத் தொழில், போக்குவரத்து, கணினி போன்ற பல்வேறு துறைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியும் பாதிக்கப்பட்டு, வேலை வாய்ப்பில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும் தொழில்களின் பாதிப்பினால் சிறு, குறு தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு, நாட்டில் பல்வேறு இடங்களில் இத்தொழிற்சாலைகள் மூடக்கூடிய நிலையில் உள்ளது. அயல் நாடுகளில் இருந்து இந்தியாவில் தொழில் புரிய வருவோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அவர்கள் தங்களின் நிறுவனம் மூலம் லாபத்தை மட்டும் ஈட்டிவிட்டு, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நிறுவனங்களை மூடி விடுவதால் அங்கு பணி புரிந்த பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, மத்திய அரசு தொழில்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி, வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.