

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
சமக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக சரத்குமார் நேர்காணல் நடத்தி வருகிறார். நேற்று நேர்காணலுக்கு இடையே நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சமக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறேன். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவெடுக்க உள்ளேன்.
அதிமுக அரசின் அவலங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம். திமுக, அதிமுகவுக்கு ஒரு மாற்று தேவை என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். சமகவின் தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் எங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.