பண மோசடியில் கைதானவர்கள் ஜாமீன் ரத்து செய்யக்கோரிய வழக்கு: குற்றப்பிரிவு ஆய்வாளர் எதிர் மனுதாரராகச் சேர்ப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: 5 மாவட்டங்களில் நிதி நிறுவனம் மூலம் ரூ.400 கோடி மோசடி செய்து கைதானவர்களின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளரை எதிர்மனுதாரராகச் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெருந்துறையில் கே.எம்.சாமி குரூப் ஆஃப் பிஆர்ஐ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்களில் ரூ.400 கோடி வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக தர்மராஜ், செல்வி உட்பட பலர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் காரைக்குடி கழனிவாசலைச் சேர்ந்த பானு என்பவர் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் தர்மராஜ், செல்வி உட்பட 28 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் தர்மராஜ், செல்வி, ரபியதுல்பதவியா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கைப் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பானு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தர்மராஜ், செல்வி, ரபியதுல்பதவியா சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். தனலெட்சுமி, லெட்சுமணன் ஆகியோர் முன்ஜாமீன் பெற்றனர். இந்த 5 பேரின் ஜாமீன், முன்ஜாமீன்களை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பானு மனுத்தாக்கல் செய்தார்.

அதில், பல்வேறு மாவட்டங்களில் ரூ.400 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளது. இதுவரை 250 பேர் புகார் அளித்துள்ளனர். தற்போது விசாரணை ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு ஜாமீன், முன்ஜாமீன் வழங்குவது விசாரணையை பாதிக்கச் செய்யும். எனவே 3 பேருக்கு வழங்கிய ஜாமீன் மற்றும் 2 பேருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, மனுவில் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளரை எதிர்மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in