Published : 15 Dec 2021 01:50 PM
Last Updated : 15 Dec 2021 01:50 PM

தங்கமணி வீட்டில் ரெய்டு; திமுக அரசின் இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சிவிட மாட்டோம்: ஓபிஎஸ்- ஈபிஎஸ்

சென்னை: திமுக அரசின் இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சிவிட மாட்டோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இன்று அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “ தற்சமயம்‌ அதிமுகவின் உட்கட்சித்‌ தேர்தல்‌ மகிழ்ச்சியோடும்‌, எழுச்சியோடும்‌, உற்சாகத்தோடும்‌ பெருந்திரளான தொண்டர்கள்‌ ஆர்வத்தோடும்‌ கலந்துகொண்டு 35 கழக மாவட்டங்களில்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருக்கிறது. இந்தத்‌ தோதலையொட்டி, உளவுத்‌ துறையின்‌ மூலம்‌ கிடைக்கப்பெற்ற தகவலின்‌ அடிப்படையில்‌, அதிமுக முன்பைக்‌ காட்டிலும்‌ கூடுதலாக மெருகேற்றிக் கொண்டு, வீறுகொண்டு எழுகிறது என்ற செய்தியை தாங்கிக்கொள்ள முடியாத, பொறுத்துக்கொள்ள முடியாத திமுக அரசு, அரசியல்‌ வன்மத்தையும்‌, தனிப்பட்ட காழ்ப்புணா்ச்சியின்‌ காரணமாகவும்‌, லஞ்ச ஒழிப்புத்‌ துறையை தன்னுடைய ஏவல்‌ துறையாக மாற்றி, முன்னாள்‌ அமைச்சர்‌ பி. தங்கமணி இல்லத்திலும்‌, அவருடைய நண்பர்கள்‌, உறவினர்கள்‌ இல்லங்களிலும்‌ சோதனை என்கின்ற பெயரில்‌ மிகப்‌ பெரிய வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இதை நாங்கள்‌ அடிப்படையிலேயே வன்மையாகக்‌ கண்டிக்கின்றோம்‌.

எம்‌.ஆர்‌. விஜயபாஸ்கர்‌, எஸ்‌.பி. வேலுமணி, கே.சி. வீரமணி, டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ போன்ற முன்னாள்‌ அமைச்சர்களின்‌ இல்லங்களிலும்‌, அவர்களுக்கு நெருக்கமானவர்களின்‌ இல்லங்களிலும்‌; அதே போல்‌, சேலம்‌ புறநகர்‌ மாவட்ட புரட்சித்‌ தலைவி பேரவைச்‌ செயலாளரும்‌, தமிழ்‌நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியின்‌ தலைவருமான இளங்கோவன்‌ இல்லத்திலும்‌ நடைபெற்ற சோதனைகளைத்‌ தொடர்ந்து, அரசியல்‌ பழிவாங்கும்‌ நடவடிக்கையாகத் தற்போது தங்கமணி இல்லத்தில்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருக்கக்கூடிய சோதனையானது அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.

திமுக அரசின்‌ அரசியல்‌ பழிவாங்கும்‌ நடவடிக்கையை. அண்ணா காலத்தில்‌ இருந்து அரசியல்‌ களமாடிக்‌ கொண்டிருக்கக்கூடிய எத்தனையோ முதுபெரும்‌ தலைவர்கள்‌ திமுகவில்‌ உள்ளபோது, தன்னுடைய குடும்பம்‌ மட்டும்தான்‌ ஆள வேண்டும்‌; வாழவேண்டும்‌ என்று அரசியல்‌ செய்து கொண்டிருக்கக்கூடிய திமுகவில்‌ தற்போது ஒரு மிகப்‌பெரிய சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, உதயநிதிதான்‌ அடுத்த தலைவர்‌ என்பதை முன்னிலைப்படுத்தும்‌ விதமாக, அடுத்தகட்டத் தலைவர்கள்‌ பேச ஆரம்பித்துள்ள இந்தச்‌ சூழ்நிலையில்‌, அரசியல்‌ விமர்சகர்களும்‌, பத்திரிகை ஊடகச்‌ செய்திகளும்‌, தற்போதைய அரசை ஸ்டாலினுடைய மருமகன்‌ சபரீசன்‌தான்‌ வழிநடத்திக்‌ கொண்டிருக்கிறார்‌ என்ற செய்தியும்‌ பரவலாகப் பேசப்பட்டுக்‌ கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில்‌, இதையெல்லாம்‌ மடைமாற்ற வேண்டும்‌ என்பதற்காக பழைய தந்திரமாம்‌ திமுகவின்‌ ஒரே தந்திரமாம்‌ அரசியல்‌ பழிவாங்கும்‌ நடவடிக்கை என்ற ஆயுதத்தை தற்போதைய திமுக முதல்வரும்‌ கையில்‌ எடுத்திருக்கிறார்‌.

கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில்‌ 42 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட போராட்டங்களையும்‌, ஆர்ப்பாட்டங்களையும்‌ சந்தித்து, மக்கள்‌ நலன்‌ சார்ந்த அரசாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்‌ அரசு தன்னுடைய நல்லாட்சியை முடித்திருக்கிறது. ஆனால்‌, பொய்யான வாக்குறுதிகளைக்‌ கொடுத்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்‌ கட்டிலில்‌ அமர்ந்திருக்கக்கூடிய திமுக அரசு, எதிர்‌ வருகின்ற 17ஆம்‌ தேதி தமிழகம்‌ தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கின்ற அதிமுக போர்ப்படைத்‌ தளபதிகளைப்‌ பார்த்து அஞ்சுவதன்‌ வெளிப்பாடுதான்‌ இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை.

பேசினால்‌ குண்டர்‌ சட்டம்‌, கருத்து தெரிவித்தால்‌ குண்டர்‌ சட்டம்‌; தீவிரமாகக்‌ களமாடினால்‌ வழக்கு, தன்னுடைய கொள்கையில்‌ உறுதியாக இருந்து, கொள்கைப்‌ பிடிப்போடு இருந்தால்‌ லஞ்ச ஒழிப்பு சோதனை என்று புறவாசல்‌ வழியாகவே பயணம்‌ செய்த திமுக, இந்த நிகழ்வையும்‌ புறவாசல்‌ வழியாகவே கையாண்டு கொண்டிருக்கிறது.

50 ஆண்டுகால அதிமுக வரலாற்றில்‌ ஆசி வழங்கிக்‌ கொண்டிருக்கக்கூடிய இருபெரும்‌ தலைவர்களும்‌ சந்திக்காத சோதனைகள்‌ அல்ல; சந்திக்காத துரோகங்கள்‌ அல்ல; சந்திக்காத வழக்குகள்‌ அல்ல. அந்த வழியில்‌, அவர்கள்‌ பாசறையில்‌ பயின்ற நாங்களும்‌, எங்களின்‌ கழக உடன்பிறப்புகளும்‌, உங்களுடைய இந்த சலசலப்புகளுக்கு எல்லாம்‌ அஞ்சிவிடமாட்டாம்‌.

முன்னாள்‌ முதல்வர்‌ கருணாநிதி தொடராத வழக்குகளா? எங்களுடைய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெறாத வழக்குகளா? அந்த வழியில்‌, தாய்வழி வந்த சொந்தங்களெல்லாம்‌ ஓர்வழி நின்று, நேர்வழி சென்றால்‌, நாளை நமதே என்ற புரட்சித்‌ தலைவரின்‌ வைர வரிகளுக்கு ஒப்பாக, இந்த வழக்குகளைச் சட்டப்படி சந்தித்து வெற்றி வாகை சூடி, புடம்போட்ட தங்கங்களாக, நெருப்பில்‌ பூத்த மலர்களாக, உயிர்த்தெழும்‌ ஃபீனிக்ஸ்‌ பறவையாக, நீரில்‌ மிதக்கும்‌ மேகங்களாக மீண்டு வருவோம்‌.

அதற்குண்டான மனோ பலத்தை எங்களுடைய இருபெரும்‌ தலைவர்களும்‌, உடல்‌ திண்மையை, மன வலிமையைக் கழக உடன்பிறப்புகளும்‌ தருவார்கள்‌ என்று சொல்லி, இந்த இயக்கமும்‌, நாங்களும்‌ யாரையும்‌ எந்த நேரத்திலும்‌ கைவிடமாட்டோம்‌. சோதனையில்‌ தோளோடு தோள்‌ நிற்போம்‌ என்று சொல்லி, மீண்டும்‌ ஒருமுறை திமுகவின்‌ இந்தப் பழிவாங்கும்‌ நடவடிக்கைகளுக்கு எங்களுடைய கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில்‌ திமுக அரசு ஈடுபடாமல்‌, நேர்மறை அரசியலை முன்னெடுத்து, தேர்தலில்‌ உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்காவது நீங்கள்‌ கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்பை முனையுங்கள்‌ என்று வலியுறுத்தவும்‌ கடமைப்பட்டிருக்கிறோம்‌” என்று தெரிவித்துள்ளனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x