Published : 15 Dec 2021 12:33 PM
Last Updated : 15 Dec 2021 12:33 PM

மதுரையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நகர் ஊரமைப்பு அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: மதுரை மாநகரில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: "முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15.12.2021) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில் மதுரை மாநகர், கூடல்புதூரில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டிடத்தைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

மாநிலத்தில் நகர்ப்பகுதிகளில் திட்டமிட்டபடி சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக நகர் ஊரமைப்பு இயக்ககம் உருவாக்கப்பட்டது. முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சி நகரப் பகுதிகளில் ஏற்படுத்திட மண்டலத் திட்டங்கள், முழுமைத் திட்டங்கள், புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களைத் தயாரித்துச் செயல்படுத்துவது, மனைப் பிரிவுகள், மனைகள், கட்டிடங்கள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் திட்டங்களில் மாற்றங்கள் செய்தல் போன்ற பணிகளை இவ்வியக்ககம் செய்து வருகிறது.

இத்தகைய முக்கியவத்துவம் வாய்ந்த பணிகளை ஆற்றிவரும் நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்குச் சொந்தக் கட்டிடம் கட்டும் வகையில், மதுரை மாநகர், கூடல் புதூரில் தரை மற்றும் முதல் தளத்துடன் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வலுவலகத்தில், இணை மற்றும் உதவி இயக்குநர்கள் அலுவலக அறைகள், பணியாளர்கள் அறைகள், கூட்டரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா, நகர் ஊரமைப்புத்துறை இயக்குநர் சரவணவேல்ராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்."

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x