

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு, அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் தங்கமணி, வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 6:45 மணிமுதல் 18 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தங்கமணியின் ஆதரவாளரான அதிமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் வெள்ளியங்கிரி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவரும் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான செந்தில், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ஈவிகேஎஸ் என்கிற சுப்ரமணியம், முன்னாள் அமைச்சரின் உறவினர் சிவா ஆகியோரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மற்றொரு ஆதரவாளரான பள்ளிபாளையம் ஒன்றிய சேர்மன் தனலட்சுமி மற்றும் அவரது கணவரும் முன்னாள் பள்ளிபாளையம் ஒன்றிய சேர்மனுமான செந்திலின் பண்ணை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.