

ரங்கம் ரங்கநாதர் கோயிலில்வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை நடைபெற்றது. நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாடிச.3-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து திருநாள் 4-ம் தேதி தொடங்கிடிச.13-ம் தேதி வரை நடைபெற்றது. பகல் பத்து திருநாளின் 10-ம் திருநாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பகல்பத்து திருநாள் முடிவுற்று ராப்பத்து திருநாள் நேற்று தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய உற்சவமான சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை நடைபெற்றது.இதையொட்டி அதிகாலை 3.30 மணியளவில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிக்கோட்டான் வாயில், தங்கக் கொடிமரம், குலசேகரன் திருச்சுற்று வழியாக விரஜா நதி மண்டபத்தை வந்தடைந்தார்.
இதைத்தொடர்ந்து அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக நம்பெருமாள் வெளியே வந்தார். பின்னர்,நம்பெருமாளுக்கு திருக்கொட்டகை பகுதியில் சாதரா மரியாதை செய்யப்பட்டது. பின்னர், ஆயிரங்கால் மண்டபத்துக்கு வந்த நம்பெருமாளுக்கு அலங்காரம், அமுதுசெய்யப்பட்டு, காலை 7 மணி முதல்பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
தொடர்ந்து, மாலையில் அரையர்சேவை, இரவு திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச்சம்பா அமுதுசெய்தல் உள்ளிட்டவை நடைபெற்று, ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.
விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அரசு முதன்மைச் செயலர்பி.சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டைப் போல, இந்த ஆண்டும் சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்கள்கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. காலை 7 மணிக்குப் பிறகுபக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.