

``விண்வெளித்துறையில் முன்னணி நாடாக இந்தியாவை உயர்த்த நமது விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும்”என ஆளுநர் ஆர்.என்.ரவி, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோதிரவ இயக்க உந்தும வளாக விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று காலை திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில், தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாகத்துக்கு ஆளுநர் வந்தார். மையத்தின் இயக்குநர் கே.அழகுவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வரவேற்றனர். அங்கு ராக்கெட் இன்ஜின் பரிசோதனைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார்.
தமிழகத்தில் கரோனா 2-வது அலையின்போது, இம்மையத்தில் இருந்து பெருமளவுக்கு திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இப்பணியை ஆளுநர் பாராட்டினார்.
பின்னர், விஞ்ஞானிகள் மத்தியில் ஆளுநர் பேசியதாவது: விண்வெளிதுறையில் உலகளவில் இந்தியா சிறப்பான இடம்பெற, தங்கள் உழைப்பை அளிக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நமது தேசத்தின் மதிப்புக்குரியவர்கள். விக்ரம் சாராபாய் போன்றவர்களின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் குறிக்கோளை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நமது விஞ்ஞானிகள், மனிதகுலத்தின் நலனுக்காக விண்வெளித் துறையில் இந்தியாவை முதன்மையான இடத்துக்கு கொண்டுவர பாடுபடுகின்றனர்.
இஸ்ரோவின் அர்ப்பணிப்பும், பணி கலாச்சாரமும் தனியார் துறையினரைக்கூட பொறாமை கொள்ள வைக்கிறது. உலகளவில் விண்வெளித் துறையில் இந்தியா முதன்மை இடம்பெற நீங்கள் அயராது பாடுபட வேண்டும். `எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்’ என்ற சுவாமி விவேகானந்தரின் மேற்கோளை, எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றார்.
பின்னர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு சென்று அவர், சூரியமின் உற்பத்தி மையத்தைப் பார்வையிட்டார். பேராசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.