

உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடந்த இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் அமைத்த தடுப்புகளை மீறி 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மேயர் ராமநாதன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இப்போராட்டம் குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில செயலாளர் வில்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம், அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் என மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தெலங்கானாவில் ரூ.3,016, புதுச்சேரியில் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும்தான் மாற்றுத்திறனாளிகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி திமுக அரசு ரூ.500 கூட உயர்த்தி வழங்கவில்லை. உதவித்தொகையை உயர்த்தி வழங்க தவறினால் அடுத்தகட்ட போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல, தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம், அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் என மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.