

கலை பண்பாட்டு இயக்கக ஆணையர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட அறிவிப்பு:
நமது பாரம்பரியமிக்க நாட்டுப்புறக் கலைஞர்களின் சமூக பாதுகாப்புக்காகவும், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம், 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 18 முதல் 60 வயது வரை உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் வாரியத்தில் உறுப்பினர்கள் ஆகலாம்.
நாட்டுப்புறக் கலைகளை அழியாமல் பாதுகாக்கவும், கலைஞர்களின் வாழ்வினை செம்மைப்படுத்தவும், கலைகளை மக்களிடையே பரப்பி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில், ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்த தொழில் வணிகத்துறை ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்கார்ட்) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலை பண்பாட்டுத்துறை கடந்த 2010-ம் ஆண்டே அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்த கல்வித்துறைகள் நடவடிக்கை எடுக்கஏதுவாக அரசாணை வெளியிடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதை கருத்தில்கொண்டு தமிழக அரசுத் துறைகள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், இயக்ககங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை ஒருபகுதியாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மூலம் நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர்களும், அவர்களின் கலைகளும் பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.