

வறுமையில் வாடும் நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயிக்கு நடிகர் விஷால் பண உதவி செய்துள்ளார். ஒரு வாரத்துக்குள் அவரை தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினராக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
சினிமா மூலம் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி (80). இவர், தான் வறுமையில் வாடுவதாகவும், அரசு வழங்கிவரும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய தொகையான ரூ.1500-ல் வாழ்க்கை நடத்தி வருவதாகவும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.
இந்த செய்தியைப் படித்த நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் அவருக்கு பண உதவி அளித்துள்ளார்.
இதுகுறித்து விஷால் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், “சுமார் 10 படங்களில் நடித்தும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகக் கூட சேர்க்காமல் கைவிடப்பட்டேன் என்று ‘தி இந்து’ நாளிதழுக்கு கொல்லங்குடி கருப்பாயி அளித்த பேட்டியை படித்தேன். உடனே சிவகங்கை மாவட்டம், கொல்லங் குடியில் உள்ள அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட் டுள்ளது. அவர் ஒரு வாரத்துக்குள் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கும் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.