

“தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு, திமுகவுடன் இணைத்துவிடலாம்” என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன்பு அடிப்படைவாதிகள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வந்தன. இலங்கையில் கொழும்பு குண்டுவெடிப்புக்கு சம்பந்தம் இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதும் தமிழகத்தில் அடிப்படைவாதிகள் இயங்கி வருகின்றனர். தமிழக காவல்துறை தனது பணியை செய்ய அரசு ஒத்துழைக்க வேண்டும். இங்கு பயங்கரவாதம் தலைதூக்க எல்லாவிதமான சூழ்நிலையும் இருக்கிறது.
மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரூ. 39 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினியை, எல்காட் நிறுவனத்தை மீறி தனியார் நிறுவனத்திடம் ரூ. 65 ஆயிரத்துக்கு அரசு வாங்கியுள்ளது.
திமுகவின் `பி - டீம்’ ஆகத்தான் தமிழக காங்கிரஸ் செயல்படுகிறது. காங்கிரஸ் விவசாயப் பிரிவினர் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக சொல்வதைப் போல், இன்னும் சில தினங்களில் தமிழக காங்கிரஸ் தலைவரும் எழுதுவார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே கிடையாது. காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைத்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் திமுக அரசு கட்டு, கமிஷன், கரப்ஷன் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது. ஒரு திட்டம் சார்ந்து நடைபெறும் வேலைகளில் 20 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள். முடிக்கப்பட்ட பணிகளுக்கு தொகையை ஒதுக்கீடு செய்ய 4 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, சுகாதாரத் திட்டம் போன்றவற்றை, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் என திமுக அரசு வேறு பெயர்களில், மாநில அரசின் திட்டங்களைப் போல செயல்படுத்துகிறது. எந்தவொரு புதுமையான திட்டத்தையும் செயல்படுத்தும் திறன் திமுக அரசிடம் இல்லை.
மத்திய அரசு 2024-ம் ஆண்டுக்குள் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத் தில் அந்த திட்டத்திலும் கமிஷன் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.