

தேமுதிகவால் திமுகவின் தேர்தல் பணிகளில் எந்த தாமதமும் ஏற்படவில்லை என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி:
தேமுதிக இணைவது தாமதமாவதால் திமுகவின் தேர்தல் பணிகள் தாமதமாகிறதா?
அதனால் எங்கள் பணிகள் தாமதிக் கப்படாது. முறைப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 197 தொகுதிகளில் 3,777 பேரிடம் நேர்காணல் நடத்தியுள்ளோம். திருச்சியில் திமுக மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங் கேற்க செல்கிறேன். இதனால் நாளை (6-ம் தேதி) நேர்காணல் நடைபெறாது. மார்ச் 7-ம் தேதி நேர்காணல் முடிந்ததும் தேர்தல் அறிக்கை வெளியீடு, கூட்டணி உடன்பாடு காண்பது, தேர்தல் பணிக்குழு அமைப்பது என வரிசையாக பணிகள் நடக்கும். எனவே, திமுகவின் தேர்தல் பணியில் தாமதம் எதுவும் இல்லை.
நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்படுகின்றனவே?
உண்மையில் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்படுவதாக கூறுவதை ஏற்க மாட்டேன். அவையெல்லாம் மறைக்கப்படுகின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததும் அவரது படங்கள் அகற்றப்படும்.
நேர்காணலில் அந்தந்த தொகுதிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டார்களா?
இன்றைய நிலையில், இதுகுறித்த விவரங்களை கூற முடியாது. தேர்வானவர்களை தலைவர் கருணாநிதி விரைவில் அறிவிப்பார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.