இந்து கோயில்களை இடிக்கிற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

ஹெச். ராஜா
ஹெச். ராஜா
Updated on
1 min read

இந்து கோயில்களை இடிக்கிற ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என பாஜகவின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

கரூரில் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டம் இன்று (டிச.14-ம் தேதி) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''மாரிதாஸ் கைதை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இனிமேலாவது தமிழக அரசு ஒழுங்காக நடந்து கொள்ளவேண்டும். இவர்கள் எப்படிப்பட்டவர்கள். முப்படைத் தளபதியின் மரணத்தைக் கொண்டாடியுள்ளனர். சமூக, தேச விரோத சக்திகள் சேர்ந்து ஒரு கட்சியை ஆட்சியில் அமரவைத்துள்ளது. கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர் எனக் கூறினேன். கருணாநிதி அவர் முடிவை அவரே எடுப்பார். ஆனால், தற்போது போராட்டக்காரர்களால் இந்த ஆட்சி நடத்தப்படுகிறது. பிரதமருக்கு கருப்பு பலூன் காட்டி கோ பேக் மோடி எனக் கூறுகின்றனர்.

கும்பகோணம், காஞ்சிபுரம் எனத் தொடர்ந்து இந்து கோயில்களை இடிக்கிற ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. பட்டா நிலத்தில் உள்ள கோயிலை இடிக்கின்றனர். ஆனால், கோயில் நிலத்தில் உள்ள கிறிஸ்தவ வணிக வளாகத்தை இடிக்கவில்லை. 100 சதவீதம் இந்துக்களுக்கு எதிரான அரசாங்கம். இந்துக்களுக்கு எதிரான மாநில பயங்கரவாதம் இங்கு உள்ளது.

இந்துக்கள் வழிபாடுகளை உரிய முறையில் செய்ய முடியவில்லை. திருச்செந்தூர் வந்த பக்தர்களை போலீஸார் தாக்குகின்றனர். திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய அனுமதியில்லை. சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. இந்து விரோத அரசு இது.

சேலத்தில் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தால் ஒமைக்ரான் பரவாதா?. கிறிஸ்துமஸிற்கு யாரும் சர்ச்சில் வழிபாடு செய்யக்கூடாது எனக் கூற தைரியம் இருக்கிறதா? இது இந்து விரோத தீய ஆட்சி. பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களின் வாக்குகளை பிக் பாக்கெட் அடித்து ஆட்சிக்கு வந்துவிட்டனர்.

மதுக்கடைகளை மூடுவோம் என்றார்கள். மூடவேண்டியதுதானே. பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம் என்றனர். இப்போது யார் தகுதியானவர்கள் என அடையாளம் காணப்போகிறோம் என்கின்றனர். வேலைக்குச் செல்லாத அனைத்துப் பெண்களும் தகுதியானவர்கள் என்றனர் அப்போது. இப்போது என்ன அடையாளம் காணும் பணி?

தமிழ் எழுதவும் தெரியாது. தமிழை எழுதவும் தெரியாது. தமிழ் விரோத ஆட்சி இது. மத்திய அரசு என்றுகூறி பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். சுதத்திரத்திற்கு முன் சேலத்தில் லண்டனில் இருந்தாவது வெள்ளையர்கள் மெட்ராஸ் மாகாணத்தை ஆளவேண்டும் என்ற தேசதுரோகிகளுக்கு சிலை வைக்கின்றனர்.

தமிழகத்தில் இந்துக்களுக்கு காஷ்மீர் போன்ற சூழ்நிலை ஏற்படுவது நிறுத்தப்படவேண்டும். பாரபட்சம் இல்லாத எல்லோருக்குமான அரசாக செயல்படவேண்டும். இந்த அரசு வாய்ப்பந்தல் அரசு. விவசாயிகள், பொதுமக்களுக்கு எதிரான விரோத தீய, ஊழல் அரசு''.

இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன், மாநிலப் பொருளாளர் சிவசுப்பிரமணியன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சிவசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in