மாணவி தற்கொலை செய்த விவகாரம்: பாலியல் தொல்லை அளித்த பள்ளி ஆசிரியர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

மாணவி தற்கொலை செய்த விவகாரம்: பாலியல் தொல்லை அளித்த பள்ளி ஆசிரியர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
Updated on
1 min read

கோவை: பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில், கைதான பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் இன்று (டிச.14) கைது செய்யப்பட்டார்.

கோவை மாநகரைச் சேர்ந்த தம்பதியருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இச்சிறுமி முதலில் தடாகம் சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். பிளஸ் 1 வகுப்பு வரை அங்கு படித்த அவர், நடப்புக் கல்வியாண்டில் அங்கிருந்து விலகி, வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 11-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமி, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். முதல் கட்ட விசாரணையில், தான் முன்பு படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி (31) என்பவர் அளித்த பாலியல் தொல்லையின் காரணமாக சிறுமி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சிறுமி எழுதிவைத்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றி, கடிதத்திலுள்ள கையெழுத்தின் உண்மைத் தண்மையை ஆராய சென்னையிலுள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆசிரியர், முதல்வர் கைது

இதையடுத்து போக்சோ, மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மாநகர் மேற்குப் பகுதி மகளிர் போலீஸார் மிதுன் சக்கரவர்த்தி மீது வழக்குப் பதிந்து கடந்த மாதம் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், நடந்த சம்பவத்தை மறைக்க முயன்றதாக, அந்தத் தனியார் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ பிரிவில் வழக்குப் பதியப்பட்டது. அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் தடுப்புப் பிரிவில் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு மகளிர் போலீஸார், மாநகரக் காவல் ஆணையர் பிரதீப்குமாரிடம் நேற்று (நவ 13-ம் தேதி) பரிந்துரைத்தனர். ஆணையரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

குண்டர் தடுப்புச் சட்டம்

இது தொடர்பாக மேற்குப் பகுதி மகளிர் போலீஸார் கூறும்போது, ‘‘முன்னரே போக்சோ, தற்கொலைக்குத் தூண்டுதல் பிரிவில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, காவல் ஆணையரின் உத்தரவைத் தொடர்ந்து, குண்டர் தடுப்புச் சட்டத்தில் இன்று (டிச.14) கைது செய்யப்பட்டார். சிறையில் குண்டர்கள் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டார்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in