Last Updated : 14 Dec, 2021 09:59 AM

 

Published : 14 Dec 2021 09:59 AM
Last Updated : 14 Dec 2021 09:59 AM

ஒரு திட்டத்தை அறிவார்ந்து யோசித்து செயல்படுத்தும் திறன் திமுக அரசிடம் இல்லை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு 

தூத்துக்குடி

எந்த ஒரு திட்டத்தையும் அறிவார்ந்து யோசித்து, புதிதாக மக்களுக்கு செயல்படுத்தும் திறன் திமுக அரசிடம் இருப்பதாக தெரியவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கட்சி சார்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவதற்காக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார்.

தொடர்ந்து அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

தமிழகத்தில் திமுக அரசு கட்டுப்பணம், கமிஷன் பணம், கரப்ஷன் பணம் என மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. ஒரு திட்டம் சார்ந்து நடைபெறும் வேலைகளில் 20% கமிஷன் கேட்கிறார்கள், முடிக்கப்பட்ட பணிகளுக்கு தொகை ஒதுக்கீடு செய்ய 4% கமிஷனை கேட்கிறார்கள்.

இவையணைத்தையும் தமிழகத்தில் ஒரு குடும்பம் மட்டுமே அனுபவிப்பதற்கு ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் இந்த ஊழல்கள் மேல்மட்டத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே கட்சியை சேர்ந்த வட்டச் செயலாளர், கிளை கழகச் செயலாளர், தொண்டர்கள் யாரும் களத்தில் மக்கள் பணி செய்வதற்கு முன்வரவில்லை.

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் பற்றி இன்னும் நான்கு மாதங்களில் தமிழக மக்களே பேசத் தொடங்குவார்கள். அவர்களே அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலை உருவாகும்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, வீடு தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை, வேறு பெயரில் திமுகவினர் மாநில அரசின் திட்டங்களை போல செயல்படுத்துகின்றனர். எந்த ஒரு திட்டத்தையும் அறிவார்ந்து யோசித்து, புதிதாக மக்களுக்கு செயல்படுத்தும் திறன் திமுக அரசிடம் இருப்பதாக தெரியவில்லை.

மத்திய அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டுவரும் நிலையில், தமிழகத்தில் திமுக அரசு அதிலும் கமிஷன் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை பெருக்க ஊக்குவிப்பதை விட்டுவிட்டு, கோவை மாவட்ட விவசாய பகுதியில் 3822 ஏக்கர் பரப்பளவில் தேவையின்றி தொழிற்சாலை அமைக்க முயல்கின்றனர்.

தமிழகத்தில் ஒரு சாமானிய மனிதன் தொழில் தொடங்க உரிமம் பெறுவதிலிருந்து தொழிலில் வருவாய் ஈட்டும் வரையில் திமுக அரசு கமிஷன் கேட்டு முட்டுக்கட்டை இடுகிறது. இதை எல்லாம் தவிர்த்தால்தான் தமிழகம் வளர்ச்சி பெறும்.

தமிழக அரசின் கடன் சுமைகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது. தமிழகத்தில் வருவாய் அதிகரிக்கக்கூடிய புதிய திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் இல்லை. அதன் வெளிப்பாடே சமீபகாலமாக ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. எனவே காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் மிக சிறப்பாக செயல்பட கூடிய திறன் தமிழக காவல்துறைக்கு உள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x