மத்திய அரசை திமுக குறைகூற கூடாது: தமிழக பாஜக தலைவர் கருத்து

மத்திய அரசை திமுக குறைகூற கூடாது: தமிழக பாஜக தலைவர் கருத்து
Updated on
1 min read

மத்திய அரசு மீது புகார் கூறுவதை மாநில அரசு தவிர்க்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோயில் வளாகத்தை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள திருமணமண்டபத்தில் பெரிய திரை மூலம் இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காஞ்சிபுரம் வந்தார். முதலில் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்ட அவர் துறவிகள், கட்சியினருடன் அமர்ந்து திறப்பு விழா நிகழ்ச்சியை பார்த்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாநில அரசு பெயரளவுக்கு மட்டுமே விவசாயத்துக்காக தனியாக பட்ஜெட் போடுகிறது. மோடி ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் உரத்தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை. மத்திய அரசு மீது மாநில அரசு புகார் கூறுவதை தவிர்த்துவிட்டு விவசாயிகளுக்காக என்ன செய்திருக்கிறது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

பரத நாட்டிய கலைஞர் ஜாகிர்உசேன் விஷயத்தில் இந்து சமய அறநிலையத் துறை நாடகமாடுகிறது. யாரெல்லாம் கடவுளை நம்பி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விரும்புகிறார்களோ அவர்களுக்கு நமது நம்பிக்கையின் அடிப்படையில் கோயிலில் நிச்சயம் இடம் உண்டு. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு காவல் துறை தலைவரை ஆதரித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. பாரபட்சம் இல்லாமல் திமுக உறுப்பினர்கள் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால் காவல் துறை தலைவரை முதல் ஆளாய் வரவேற்பது பாஜகதான் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in