

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது, துரிதமாக செயல்பட்டு மீட்புப்பணிகளில் ஈடுபட்ட அப்பகுதி மக்களுக்கு குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் ராணுவம் சார்பில் நன்றி தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
வருவாய் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித், காவல் துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், தீயணைப்புத் துறை சார்பில் உதவி தீயணைப்பு அலுவலர் ஏ.நாகராஜ், மின்வாரியம் சார்பில் மின்பாதை ஆய்வாளர் மோகன்ராஜ் ஆகியோருக்கு தென்பிராந்திய ராணுவ அதிகாரி ஏ.அருண் பரிசு வழங்கினார்.
அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித் கூறும்போது, ‘‘சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மீட்புப்பணிகளில் உடனடியாக ஈடுபடவும், ராணுவத்தினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார். அதன்பேரில் அனைத்துத் துறை அதிகாரிகளும், மீட்புப்பணிகளில் துரிதமாக ஈடுபட்டனர்,’’ என்றார்.
அதன்பின்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ்ராவத் கூறும்போது, ‘‘காவல் துறையினர் தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளனர்,’’ என்றார்.
உதவி தீயணைப்பு அலுவலர் ஏ.நாகராஜ் கூறும் போது, ‘‘விபத்து குறித்து குன்னூர் தீயணைப்பு அலுவலகத்துக்குதான் மக்கள் தகவல் அளித்தனர். ராணுவ உயரதிகாரிகள், ராணுவ மையத்துக்கு வர இருந்ததால் வெலிங்டன் ஜிம்கானா பகுதியில் நாங்கள் பணியில் இருந்தோம். அப்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டோம்,’’ என்றார்.
மின்வாரிய மின் பாதை ஆய்வாளர் மோகன்ராஜ் கூறும்போது, ‘‘விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக அப்பகுதிக்கான மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டேன். விபத்து நடைபெற்ற இடத்தில் உயர் அழுத்த மின் கம்பங்கள் இல்லாததால், பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது,’’ என்றார்.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து முதன்முதலாக கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் அளித்த குன்னூரை சேர்ந்த ஜெயசீலன் என்பவருக்கு, கியூ பிரிவு ஐஜி ஈஸ்வரமூர்த்தி உத்தரவின்பேரில், எஸ்பி கண்ணம்மாள், காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் வெகுமதி வழங்கி பாராட்டினர்.