Last Updated : 13 Dec, 2021 08:06 PM

 

Published : 13 Dec 2021 08:06 PM
Last Updated : 13 Dec 2021 08:06 PM

மாரிதாஸ் கைது செய்யப்பட்டது ஏன்?- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

மதுரை

தமிழகத்தின் அமைதியை குலைக்கும் வகையிலும், அரசுக்கு எதிராக மக்களை திருப்பும் நோக்கத்திலும் பதிவிட்டதால் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார் என உயர் நீதிமன்ற கிளையில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ். இவரை குன்னூர் அருகே ஹெலிகாப்டரில் சென்ற முப்படை தலைமை தளபதி பிவின் ராவத் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக, தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், முப்படை தலைமை தளபதி மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாரிதாஸின் பதிவு, சாதாரண மன நிலையில் இருக்கும் நபர்களை அரசுக்கு எதிராக சிந்திக்க தூண்டும் வகையில் உள்ளது.

அவர் தனது ட்விட்டர் பதிவில், திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? எந்த சதிவேலையும் நடக்கிறதா? எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது வன்முறையை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. கைதுக்கு முன்பு அந்த ட்விட்டை நீக்கியுள்ளார். அவரது ட்வீட்டால் ஆதரவு, எதிர்ப்பு என இரு குழுக்கள் உருவாகி மோதல் ஏற்பட்டிருக்கும். அவர் கைது செய்யப்பட்டதால் அந்த மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, முப்படை தலைமை தளபதி மரணம் குறித்து சுப்பிரமணிய சுவாமியும் சந்தேக கேள்வியை எழுப்பியிருந்தாரே?

அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகம் கிளப்பப்பட்டது? முப்படை தலைமை தளபதியின் மரணத்தை கொண்டாடியவர்களும் உள்ளார்களே? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு, மாரிதாஸின் பதிவு, முப்படை தலைமை தளபதியின் மரணத்திற்கு காரணம் தமிழக அரசு என்பது போல், தமிழக அரசின் மீது குற்றம் சாட்டும் வகையில் இருந்தது. திமுக ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே பிரச்சினையை ஏற்படுத்தி தமிழகத்தின் அமைதியை குலைக்கும் வகையிலும், அரசுக்கு எதிராக மக்களை திருப்பும் நோக்கத்திலும் இருந்தது. இதனால் கைது செய்யப்பட்டார்.

மாரிதாஸ் மட்டும் இல்லை, இதுபோன்ற ட்வீட்களை, தமிழகத்தில் வேறு யாரேனும், எந்த அமைப்புகள் சார்பிலும் டுவீட் செய்யப்பட்டிருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். மாரிதாஸ் பாஜகவை சேர்ந்தவர்.

தமிழக அரசிற்கு எதிராக, அரசியல் சூழ்ச்சியுடன் இந்த பதிவை ட்வீட் செய்துள்ளார். அவரது வழக்கை ரத்து செய்யக்கூடாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிட்டார்.

மாரிதாஸ் வழக்கறிஞர் ஆனந்தபத்மநாபன் வாதிடுகையில், தமிழகத்தில் பிரிவினை வாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும். திக, திமுகவைச் சேர்ந்த பலர் முப்படைத் தளபதியின் மரணத்தை கொண்டாடும் வகையில் பதிவிட்டுள்ளனர். பகிர்ந்துள்ளனர்.

அவரது பதிவில் குறிப்பிட்ட கட்சி குறித்தோ, மதம் குறித்தோ, சமூகம் குறித்தோ கருத்து இல்லை. தமிழக அரசுக்கு எதிராகவோ, முதல்வருக்கு எதிராகவோ எந்த கருத்தும் இல்லை என்றார்.

பின்னர், மாரிதாஸ் மீது புகார் அளித்த திமுக ஐடி பிரிவு நிர்வாகி பாலகிருஷ்ணன் தரப்பில் கூடுதல் வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x