

எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு தமிழக ஆளுநர் மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வரவேற்றார்.
தொடர்ந்து அவர், கார் மூலம் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் வீட்டுக்கு வந்தார். அங்குள்ள பாரதியார் மார்பளவு சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பாரதி வீட்டில் உள்ள பாரதியாரின் புகைப்படங்களை பார்வையிட்டார்.
பின்னர் அங்கிருந்து பாரதியார் மணிமண்டபத்துக்கு வந்தார். அங்கு அவரை பள்ளி மாணவ, மாணவிகள் பாரதியார் வேடமணிந்து கைகளில் தேசிய கொடியேந்தி வரவேற்றனர். காரில் இருந்து இறங்கிய ஆளுநரும், அவரது மனைவியும் மாணவ, மாணவிகளிடம் சென்றார். அப்போது 5-ம் வகுப்பு மாணவி ஷோபனா தேவி பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் என்ற கவிதையை பாடினார். இதனை கேட்ட ஆளுநர், ரெம்ப சந்தோஷம் என தமிழில் கூறி மாணவ, மாணவிகளை பாராட்டினார்.
தொடர்ந்து, மணிமண்டபத்தில் பாரிதியாரின் முழு உருவச்சிலைக்கு ஆளுநர் ரவியும், அவரது மனைவியும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். பின்னர் காரில் புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றனர்.