Published : 13 Dec 2021 02:53 PM
Last Updated : 13 Dec 2021 02:53 PM

கம்யூனிச வரலாற்று நூல்களின் ஆசிரியர் என்.ராமகிருஷ்ணன் காலமானார்: முதல்வர் ஸ்டாலின், முத்தரசன் இரங்கல்

மறைந்த என்.ராமகிருஷ்ணன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் | கோப்புப் படம்.

சென்னை

விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவின் சகோதரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆசிரியருமான என்.ராமகிருஷ்ணன் நேற்று காலமானார்.

இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

''தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், An Outline History of the Communist Movement of the World போன்ற பல தலைசிறந்த இடதுசாரி இயக்க வரலாற்று நூல்களை எழுதிய தோழர் என்.ராமகிருஷ்ணன் திடீரென்று மறைவெய்தினார் என்ற வேதனைமிகு செய்தி அறிந்து மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். என்.ஆர். எனப் பொதுவுடைமை இயக்கத்தினரால் அன்புடன் அழைக்கப்பெறும் இவர் அண்மையில் தமிழக அரசின் 'தகைசால் தமிழர்' விருது பெற்ற தியாகி சங்கரய்யாவின் சகோதரரும் ஆவார்.

பொதுவுடைமைக் கொள்கைகளையும்- அவ்வியக்கத்தின் வரலாற்றையும் கடைக்கோடிக்கும் கொண்டு சேர்க்கும் பணியைத் தன் வாழ்நாள் கடமையாகவே மேற்கொண்ட எழுத்தாளராக விளங்கிய அவரது மறைவு மார்க்சிய அறிவுலகிற்குப் பேரிழப்பாகும். தோழர் என்.ஆரை இழந்து வாடும் அவரது சகோதரர் தோழர் என். சங்கரய்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

என்.ஆரின் புத்தகங்கள் இளம் படைப்பாளிகளுக்கு உதவும்: முத்தரசன் இரங்கல்

என்.ராமகிருஷ்ணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

''கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த முன்னோடி தோழர் என்.ராமகிருஷ்ணன் நேற்று (12.12.2021) காலமானார் என்ற துயரச் செய்தி ஆழ்ந்த வேதனையளிக்கிறது.

மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யாவின் சகோதரரான தோழர் என்.ராமகிருஷ்ணன் சிறுவயது முதல் இடதுசாரி அரசியலை முன்னெடுத்தவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) நாடாளுமன்றக் கட்சி அலுவலகச் செயலாளராகப் பணியாற்றியவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு பற்றியும், இயக்கத் தோழர்களின் வரலாற்றையும் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டியவர். இவரது தமிழ், ஆங்கில நூல்கள் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை அறிந்துகொள்ளப் பெரிதும் உதவும். இவை காலகாலத்திற்கும் வரலாற்று ஆவணங்களாகத் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.

என்.ராமகிருஷ்ணன் படைப்புகளும், ஆய்வு முயற்சிகளும் பல இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாக உதவும். அவரது மறைவு இயக்க வரலாற்றை ஆவணப்படுத்தும் துறைக்குப் பேரிழப்பாகும்.

தோழர் என்.ராமகிருஷ்ணன் மறைவுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த அஞ்சலி தெரிவிப்பதுடன், அவரைப் பிரிந்து வாடும் தோழர் என்.சங்கரய்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது''.

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x