

ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவத் தளபதி உயிரிழந்த சம்பவத்தைத் தவறாக விமர்சித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என இந்திய விமானப் படை கேட்டுக்கொண்டுள்ளது.
எனினும் சிலர் இதில் தேவையற்ற சர்ச்சையை எழுப்பி வருகின்றனர். குன்னூரில் அண்மையில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவத் தளபதி உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர்தான் காரணமாக இருக்கலாம் என நாம் தமிழர் கட்சியின் விராலிமலை தொகுதி செய்தித் தொடர்பாளரான, புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் துவரவயலைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், முகநூலில் கருத்து தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாஜகவின் பிறமொழித் தொடர்புப் பிரிவின் மாவட்டத் தலைவர் கே.ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், பாலசுப்பிரமணியன் மீது நேற்று (டிச.12) கீரனூர் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.