Last Updated : 13 Dec, 2021 03:06 AM

 

Published : 13 Dec 2021 03:06 AM
Last Updated : 13 Dec 2021 03:06 AM

புரையோடிய சந்தை நடைமுறைகளிலிருந்து பழங்குடி மக்களை விடுவிக்க வேண்டும்

மரபார்ந்த இந்திய வேளாண்மை அங்காடிகளில் உள்ள குறைகள் என கீழ்க் காணும் விஷயங்கள் பட்டியலிடப்படுகின்றன.

தரம் குறைந்த விதைகள். மிகப் பழமையான சாகுபடி முறைகள். நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கஇயலாமை. நம்பகத்தன்மை அற்ற பருவமழை. சாகுபடிக்கு பிறகு, சேமித்து வைத்துநல்ல விலைக்கு விற்க, கிடங்கு வசதியின்மை. போக்குவரத்து வசதியின்மை. சந்தை விலை நிலவரங்களின் அறியாமை. ஏராளமான இடைத்தரகர்கள். சந்தைப்படுத்தும் வசதிகள் இன்மை. கடன் நெருக்கடி காரணமாக கட்டாய விற்பனை எனபலவற்றை பட்டியலிடுகின்றனர். இவை வெகுவாக சமவெளிப் பகுதியில் மாறிவிட்டது. ஆனால், மலைப் பகுதியில் குறிப்பாக பழங்குடி விவசாயிகளுக்கு இந்த குறைபாடுகள் இன்னமும் நீடிக்கிறது.

பழங்குடி மக்களின் சாகுபடி பரப்பு, சாகுபடி செய்யும் பயிர்கள், அதில் சந்தைப்படுத்தும் அளவு என எல்லாம் மிகக்குறைவுதான். ஆனால் கடன் உதவியும், நல்ல சந்தை வசதியும் இல்லையெனில் எக்காலத்திலும் பழங்குடிகள் முன்னேற்றம் அடையவே முடியாது.

பழங்குடிகளின் சாகுபடி பயிர்கள்

பழங்குடிகளின் உணவுத் தேவைக்கான முக்கியப் பயிர் சாகுபடி ராகி. இதுதவிர அவரை, பீன்ஸ், கொள்ளு, சாமை, தினை, எள் ஆகியவையும் உணவுத் தேவைக்கும் அதிகமாகவிளைந்தால் விற்பனையும் செய்யப்படுகிறது. மக்காச்சோளம், நிலக் கடலைமற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவை விற்பனைக்கென்றே சாகுபடி செய்யப் படுகின்றன. ராகி உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்களை 53% (506 பேர்) பழங்குடிகள் விற்பனை செய்வதில்லை. 86 பேர் மட்டுமே (9%) மீதமிருந்தால் விற்பனை செய்கிறோம் என்ற கருத்தை தெரிவித்தனர். சாகுபடிக்காக அவர்கள் வாங்கும் கடன்களே, பெரும் பகுதி பலன்களை சாப்பிட்டு விடுகிறது.

சிலந்தி வலை போன்ற கடன் வலைப் பின்னல்

சொந்த பயன்பாட்டுக்கு சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு, பெரும்பாலும் வர்த்தகர்கள் கடன் தருவதில்லை. எனவே சாகுபடிக்கு தேவையான கடன் முழுவதையும் மலையில் இருக்கும் கந்து வட்டிக்காரார்கள் அல்லது குறைந்தபட்சம் நூற்றுக்கு 3 ரூபாய் வட்டிக்கு தருவோரிடம் கடன் வாங்குகின்றனர்.

வியாபாரிகளிடம் முடங்கிக் கிடக்கும் பயிர்கள்

மக்காச்சோளம், நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு போன்ற பயிர் சாகுபடியில் ஈடுபடும் பழங்குடிகள், விதை, உரம்,பூச்சிக்கொல்லி மருந்துகள், களையெடுப்பு, அறுவடை என எல்லாவற்றுக்கும் அந்தப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரியை நம்பியே உள்ளனர். விதைப்பு முதல் அறுவடை வரையான அனைத்து கணக்குகளும் வியாபாரியின் ஏட்டில்தான் எழுதப்பட்டிருக்கும். பழங்குடிகளிடம் எந்தக் கணக்கும் இல்லை. அறுவடை நாள் அன்று எத்தனை டன் விளைந்தது என்று தெரியும். கடன் போக கையில் கொடுக்கப்படும் தொகை தெரியும்.

ஒருவேளை, விவசாயிகளின் செலவு அதிகமாக இருந்து விளைச்சல் அல்லது விலை குறைவாக இருந்தால், விளைச்சல் போக மீதித் தொகை கடனாக கொள்ளப்பட்டு அதற்கு வட்டி வசூல் செய்யப்படும். ஒரு விவசாயிக்கு, தான் விளைவிக்கும் பொருளின் சந்தை விலை என்ன? தனது விளைச்சல் என்ன விலைக்கு விற்கும் என்று எதுவும் தெரியாமல், ஏதோ ஒரு தொகையை கையில் பெற்று, இதுவே தனது உழைப்பின்/ நிலத்தின் நிகர வருமானம் என்று கணக்கில் கொள்வது எவ்வளவு பெரிய கொடுமை. பழங்குடிகளுக்கு இந்த அநீதி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த சிலந்தி வலை கடனில் இருந்து பழங்குடிகளை விடுவிக்காமல் அவர்களின் தற்சார்பு சாத்தியம் இல்லை.

என்ன செய்ய வேண்டும்?

# வருவாய் புறம்போக்கு என்று சொல்லப்படுகிற நிலங்களை பழங்குடிகளின் பூர்வீக நிலமாக மாற்றித் தர வேண்டும். இதன் வழியாக மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், பொதுத் துறை கூட்டுறவுத் துறை கடன்கள் அவர்களை சென்று அடையும். இதனால் கடன் பளுவில் இருந்து தப்பிக்க இயலும்.

# பழங்குடிகளின் சாகுபடிக்கு தேவையான பயிர் கடன் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் வழியாக நிறுவனமயமான கடன்களாக குறைந்த வட்டியில் கிடைக்கச் செய்ய வேண்டும்.

# வேளாண் விளைபொருட்களுக்கான சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றை அறிந்து, எது லாபமோ அதன்படி நேரிடையாக விற்க வகை செய்ய வேண்டும்.

# மலைப் பகுதியில் நேரடி கொள்முதல் மையங்கள் திறக்கப்பட வேண்டும்.

# வேதி உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி இயற்கை வேளாண்மை வழியாக உற்பத்தித் திறனை அதிகரித்து நல்ல விலைக்கு விற்கும் வழிமுறைகளை கற்றுத் தர வேண்டும்.

இத்தகைய முயற்சிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டால் பழங்குடி விவசாயிகளை தற்சார்பு விவசாயிகளாக மாற்ற முடியும்.

கட்டுரையாளர்: பொருளியல் துறைத் தலைவர், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, இந்திய அரசின் ICSSR நிதி நல்கை பெற்ற ஆய்வாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x