

மத்திய செம்மொழி தமிழாய்வுநிறுவனம் சார்பில் சங்க இலக்கிய நூல்கள் முதல்முறையாககன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழ் செவ்வியலின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டும் செல்லும் நோக்கில், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன்படி, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம் சீனம், ஜப்பானீஸ், கொரியன் உள்ளிட்ட 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதேபோல, திருக்குறளை 58 பழங்குடியினர் மொழிகள் உட்பட 120-க்கும்மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 9 சங்கஇலக்கிய நூல்கள் முதல்முறையாக கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் கூறியதாவது:
கிமு.300 - கிபி. 300 வரையிலான காலகட்டத்தில் எழுந்த பாடல்களின் தொகுப்பாக சங்க இலக்கியம் அமைகிறது. அதன்படி, எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்கஇலக்கியமாகும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலர்’, ‘செல்வத்துப் பயனே ஈதல்’ உள்ளிட்ட ஏராளமான உயரிய கோட்பாடுகளை சங்க இலக்கியம் கொண்டுள்ளது.
இதை உலக மக்களிடையே கொண்டும் செல்லும் நோக்கில் மொழிபெயர்க்கும் பணியை தமிழாய்வு நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. முதல்கட்டமாக, கன்னட மொழியில் சங்க இலக்கியங்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க இலக்கியங்கள் சுமார் 8 ஆயிரம் பக்கங்களை கொண்ட 9 நூல்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கன்னடத்தில் இல்லாத அகப் புறக்கோட்பாடுகள் அந்த மொழிக்குகிடைப்பதோடு, தமிழுக்கே உரியபிற கோட்பாடுகளையும், சொற்சிறப்பினையும் அம்மொழி வாயிலாகவே உயர்த்த முடியும்.
இரு மொழிகளின் இலக்கியத்தை ஒப்பீட்டாய்வு செய்வதன்மூலம் மொழி அறிஞர்களுக்கு மிகப்பெரிய ஆய்வுத் தளத்தை உருவாக்க முடியும். மொழி அறிஞர்கள் ஒன்றிணைந்தால், இரு மாநிலங்களுக்கும் இடையே நல்லுறவும் வலுப்பெறும்.
மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுக்கு கன்னட மொழி அறிஞர்கள்மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மொழிபெயர்ப்பு பணியில் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் பேராசிரியர் இரா.சீனிவாசன் ஒருங்கிணைப்பில், பேராசிரியர்கள் தா.கிருஷ்ணமூர்த்தி, கே.மலர்விழி, ஏ.சங்கரி, ஜி.சுப்பிரமணியன், மா.அரங்கசாமி, கே.வனஜா குல்கர்னி, நா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர். சங்க இலக்கியங்களை பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.