

கூட்டணி என்றால் இப்போதெல்லாம் காலை வாருவது என்று அர்த்தம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
சேலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
வட தமிழகத்தில் நாம் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் ஆட்சியை கைப்பற்றி இருக்க வேண்டும். பாமக தனித்துப் போட்டியிட்டபோது 4 இடங்களில் வெற்றி பெற்றது.
சிலரது கருத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்தோம். ஆனால், கூட்டணி என்றால் இப்போதெல்லாம் காலை வாருவது என்று அர்த்தம். பாமக வெற்றிபெறக் கூடாது என கூட்டணி தர்மம் அதர்மம் ஆகிவிட்டது. 23 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் வெறும் 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
வன்னியர்களின் வாக்கு வங்கி எங்கே போனது. “தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவேன்” என்ற அன்புமணியை நீங்கள் வெற்றிபெறச் செய்யவில்லை. தொகுதிகள் வேண்டாம், தேர்தலும் வேண்டாம். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குங்கள் என்றோம். 2 கோடி வன்னியர்களை நம்பித்தான் இந்த தேர்தல் வரையிலும் வந்திருக்கிறோம். ஆனால், கூட்டணி கட்சிகளிடம், தொகுதிகளை கேட்டுப் பெறக்கூடிய நிலையில் தான் இருக்கிறோம்.
பாமக தான் உங்களை படிக்கச் சொல்கிறது. ஆனால், ஆண்ட கட்சிகளும், ஆளுகிற கட்சியும் உங்களை படிக்கவும், குடிக்கவும் சொல்கிறது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், பாமக தலைவர் ஜி.கே.மணி, எம்எல்ஏ சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.