

சென்னை மாநகராட்சி சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று நடைபெற்ற தூய்மைப் பணியில், 75 டன் கழிவுகள் அகற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக வகைப்படுத்தப்படுகின்றன.
இதில், மக்கும் குப்பை இயற்கை உரமாக்கப்பட்டு, பிளாஸ்டிக், ரப்பர் போன்ற மக்காத குப்பை மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள குப்பை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
சென்னையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக கடற்கரைப் பகுதிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பை கரை ஒதுங்கியது. இதைக்கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரரான உர்பசேர் சுமீத் நிறுவனம் மூலம், பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் வரை 270 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டன.
மேலும், நேற்று பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கத்தினர் இணைந்து தீவிர தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியில் 3 ஆயிரம் பேர் பங்கேற்று, 75 டன் திடக்கழிவுகளை அகற்றினர். கடற்கரையில் இருந்து அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பையை சேகரித்த மாணவர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) எஸ்.மணீஷ், தெற்கு வட்டார துணை ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், உர்பசேர் சுமீத் நிறுவன தலைமை செயல் அலுவலர் மெஹ்மூத் செயட், மேலாண்மை இயக்குநர் ராவுல் மார்டினெஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.