

மத்திய அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தொமுச, சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக மு.சண்முகம் (தொமுச), சுகுமாறன் (சிஐடியு), ஆதிகேசவன் (ஐஎன்டியுசி) உட்பட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் நேற்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றன. ஆனால், ஆளும் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறி, ஏமாற்றி வருகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்துவதாக கூறி, தற்போது உள்ள சலுகைகள், உரிமைகளை இழப்பதற்கு மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
முத்தரப்பு குழுக்களின் முடிவு அடிப்படையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று போராடி வரும் நிலையில், தன்னிச் சையாக சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு முயற் சிக்கிறது. வைப்புநிதி, இஎஸ்ஐ திட்டத்தை தன் விருப்பத்துக்கு ஏற்ப மாற்ற, புதிய ஓய்வூதியத் திட்டத்தை வைப்புநிதியில் கொண்டு வந்து புகுத்த முடிவு செய்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்வது, புதிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தில் பொதுத்துறையை அழித்து, பேருந்துகளை இயக்க தனியாருக்கு உரிமங்களை எளிமையாக வழங்குவோம் என்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்த 11 தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் 10-ம் தேதி மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் பிஎம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, டியுசிசி, சேவா, தொமுச, யுடியுசி ஆகிய 11 தொழிற்சங்கங்கள் பங்கேற்கும்.
இதைத் தொடர்ந்து, வரும் 30-ம் தேதி டெல்லியில் கருத்தரங்கம் நடத்தவும், ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.