Published : 13 Dec 2021 03:08 AM
Last Updated : 13 Dec 2021 03:08 AM

தாம்பரம், பீர்க்கன்காரணையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.84 கோடியில் பாதாள மூடு கால்வாய் திட்டம்: உடனே செயல்படுத்த முதல்வருக்கு கோரிக்கை

தாம்பரம்

தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்காரணை பகுதிகளில் மழை, வெள்ளப் பாதிப்பை தடுக்க ரூ.84 கோடியில் பாதாள மூடு கால்வாய் திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து பணியை தொடங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வண்டலூர் மலையிலிருந்து வெளியேறும் மழைநீர் பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர் போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகளுக்குச் செல்லும். முன்பு, பீர்க்கன்காரணை ஏரி நிரம்பி அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் நேரடியாக இரும்புலியூர் ஏரிக்குச் சென்று, அங்கிருந்து தாம்பரம் ஏரிக்கு வந்து பின்னர் அடையாறு ஆற்றில் கலக்கும். ஆனால் பீர்க்கன்காரணை, இரும்புலியூர், தாம்பரம் ஏரிகளில் வெளியேறும் உபரிநீர் செல்ல தற்போது போதிய வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்கிறது.

சமீபத்தில் தமிழக முதல்வர்தாம்பரம் பகுதியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தபோது, 'இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுஏற்பட திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் முடிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது' என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, 'அதற்கான அனுமதியும் நிதி ஒதுக்கீடும் செய்யப்படும்' என முதல்வர் தெரிவித்திருந்தார். எனவே இந்த திட்டத்தை உடனே செயல்படுத்த, அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நீர்வள ஆதாரத் துறையினர் கூறியதாவது: பீர்க்கன்காரணை, இரும்புலியூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுவதற்கு போதிய வடிகால் இல்லை. நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டத்தின்கீழ், கடந்த 2019-20-ம் ஆண்டு இந்த ஏரிகளின் உபரிநீர் நேரடியாக அடையாற்றில் கலக்கும் வகையில் ரூ.84 கோடியில் பாதாள மூடு காய்வாய் திட்டத்தை தயாரித்து, திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி பீர்க்கன்காரணை ஏரியிலிருந்து 600 மீட்டர், இரும்புலியூர் ஏரியிலிருந்து 1.5 கிமீ தொலைவுக்கு பாதாள மூடுகால்வாய் மூலம் உபரிநீர் கால்வாய்இரும்புலியூர் ரயில்வே மேம்பாலம்வரை கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்தின்கீழ் உள்ள கால்வாயை அகலப்படுத்த ரயில்வே துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. பின்னர் இரும்புலியூர் வாணியங்குட்டை பகுதியில் இருந்து தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் மூடு கால்வாய் மூலம் 1,600 மீட்டர் தூரம் கொண்டு சென்று, ஏற்கெனவே முடிச்சூர் சாலையில் உள்ள பாதாள மூடு கால்வாயுடன் இணைக்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.60 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாம்பரம் - சோமங்கலம் சாலையில் ரூ.24 கோடியில் பாதாள மூடு கால்வாய் மூலம் நேரடியாக அடையாறு ஆற்றை இணைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழும் நிலையைத் தடுக்க முடியும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x