

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களில் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுரை மாவட்டம் உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் ரவீந்தரன் என்பவர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வருவாய்த் துறை அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளானதால் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இறந்த ரவீந்திரன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆஸ்பெடாஸ் கூரை வேய்ந்த வீடுகளில் 30 ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். குடிநீர், சுகாதாரம், கழிவுநீர் வெளியேறும் வசதி, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் முகாம்களில் போதுமானதாக இல்லை.
உரிய நேரத்துக்குள் முகாம்களுக்கு வந்துவிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டினால் விருப்பப்படும் வேலையிலோ, வெளியில் சென்று படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அசையும், அசையா சொத்துக்கள் வாங்க முடியாத நிலை இருப்பதால் அவர்களில் இருசக்கர வாகனங்களைக் கூட வாங்க முடியவில்லை.
இவை அனைத்தையும் விட வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறையினரால் இலங்கைத் தமிழ் அகதிகள் பல்வேறு அலைக்கழிப்புக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிய வருகின்றனர். அதிமுக, திமுக அரசுகள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. ரவீந்திரன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இலங்கை அகதி முகாம்களில் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.