

தொடர் மழை, கடைசி முகூர்த்த நாள் காரணமாக மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ நேற்று ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனையானது.
மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மல்லிகைப் பூ உட்பட பிற பூக்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை மாட்டுத் தாவணி மலர் சந்தைக்கு பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.
கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாள், சபரிமலை சீசன் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் வரை ரூ.2500-க்கு விற்பனை யான மல்லிகைப் பூ நேற்று ஒரே நாளில் ரூ.1,500 அதிகரித்து ரூ.4000-க்கு விற்பனையானது.
மல்லிகைப் பூக்களோடு மற்ற பூக்களின் விலையும் அதி கரித்ததால் பொதுமக்கள் சிறு வியாபாரிகள் கவலையடைந்தனர்.
இதுகுறித்து மாட்டுத்தாவணி மலர் கமிஷன் வியாபாரிகள் சங்கச் செயலாளர் ஏ.வி.மனோகரன் கூறியதாவது:
தொடர் மழையால் விளைச்சல் பாதித்துள்ளது. சாதாரண நாட்களில் குறைந்தது 5 டன் மல்லிகைப்பூக்கள் வரும். தற்போது ஒரு டன் மட்டுமே வந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனையானது.
முல்லைப்பூ ரூ.1500, பிச்சிப்பூ ரூ.1300, நாட்டு ரோஜா ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.350, சம்பங்கி ரூ.200, அரளி ரூ.400, செவ்வந்தி ரூ.200, கேந்தி ரூ.150, கோழிக்கொண்டை ரூ.200-க்கு விற்பனையானது, என்றார்.