

தமிழ் கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நக்கீரர் தமிழ்ச் சங்க மாநாட்டில், பேசினார் மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். திருப்பரங்குன்றத்தில் நக்கீரர் தமிழ்ச் சங்க மாநாடு, அந்த அமைப்பின் தலைவர் முத்து தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். புதுடெல்லி அகில இந்திய தமிழ்ச் சங்க தலைவர் முகுந்தன் முன்னிலை வகித்தார்.
இம்மாநாட்டில், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது: தமிழ் தொன்மையான, பழமையான மொழி. அம்மொழியின் தொன்மை புரியாமல் பெற்றோரை ‘மம்மி டாடி’ என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு போய்விட்டாலும் அவர்களது சம்பிரதாயங்களை கடைப்பிடித்து வருகிறோம். இந்நிலை மாற வேண்டும்.
தமிழ் மொழியை போற்றி வளர்க்க வேண்டும். உயர் நீதிமன்றம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது. ஆனால் நான் எழுந்து நிற்பேன்.
தமிழ் கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.