Published : 09 Mar 2016 09:23 PM
Last Updated : 09 Mar 2016 09:23 PM

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தொடர்பான மறு ஆய்வு மனுவை திரும்பப் பெறுக: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை திரும்ப பெற வேண்டும் என, மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது ஆய்வு மனு தாக்கல் செய்ததன் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய பொது நுழைவுத்தேர்வையோ அல்லது வேறு வடிவத்தில் தேர்வு நடத்த முயற்சித்தால் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என கடந்த மாதம் 9-ம் தேதி எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தேன். பொது நுழைவுத்தேர்வு நடத்தினால் கிராமப்புற ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

தமிழக அரசு கடந்த 2005-ம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்தது. இதன் மூலம் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்புக்கான தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்துவது மாநில உரிமைகளை பாதிக்கும்.

கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நுழைவுத்தேர்வு தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தது. பெரிதும் வரவேற்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து, அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தது.

இது தொடர்பாக 2013 ஜூலை 28-ம் தேதி அப்போதைய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், மறு ஆய்வு மனுவை திரும்ப பெற வேண்டும் என வலியறுத்தினேன். மத்திய அசின் மறு ஆய்வு மனுவை எதிர்த்து தமிழக அரசின் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, கடந்த 2014 ஜூன் 3-ம் தேதி தங்களை சந்தித்தபோது அளித்த மனுவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை திரும்ப பெறுவது தொடர்பாக பரிசீலிக்க கோரியிருந்தேன்.

இந்நிலையில், மருத்துவ பொது நுழைவுத்தேர்வை நாடு முழுவதும் அறிமுகம் செய்வது தொடர்பான இந்திய மருத்துவக் கவுன்சிலின் திட்டம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், இதர அமைச்சகங்களிடம் கருத்து கேட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத இடங்கள், 50 சதவீத முதுநிலை மருத்துவ இடங்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, பொது மருத்துவ நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இந்நிலையில், பொது நுழைவுத்தேர்வின்கீழ், மாநில அரசின் ஒதுக்கீட்டையும் இணைப்பது மாநில உரிமையை பாதிக்கும். மருத்துவ முதுநிலை படிப்புகளை பொறுத்தவரை, கிராமங்கள், மலைப்பகுதிகள், பழங்குடியின பகுதிகளில் சேவை செய்யும் மாணவர்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட காலம் அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றுவதையும் உறுதி செய்து வருகிறது.

இந்நிலையில், பொது நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டால், மாநிலத்தில் சமூக பொருளாதார அடிப்படையில் அமலாக்கப்பட்டுள்ள இந்த கொள்கை திட்டங்களை பாதிப்படையச் செய்யும். எனவேதான், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்து நிலுவையில் இருந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணை வரும் 15-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. எனவே, அந்த மறு ஆய்வு மனுவை திரும்ப பெறும்படி மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை கடந்த 2013-ல் உச்ச நீதிமன்றமே உறுதி செய்த நிலையில், சட்டமியற்றுவதன் மூலம் வேறு வழியில் இதை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டாம்'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x