

தொண்டி அருகே மீன் எண்ணெய் நிறுவனத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி ஒடிசா மாநிலத் தொழிலாளி உயிரிழந்தார். மேலும் பாதிக்கப்பட்ட 2 தொழிலாளர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மச்சூரில் தனியார் மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் ஒடிசா மற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் சிலர் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது விஷவாயு தாக்கி 3 இளைஞர்கள் மூச்சுத்திணறல் ஏற்றப்பட்டு மயக்கமடைந்தனர். அதனையடுத்து அங்கிருந்த சக பணியாளர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். மயக்க நிலையில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நபின் ஓரம் (24), ஜஸ்மன்குதூர் (20), அணில் மாஜித் (24) ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் சிகிச்சைப் பலனின்றி நபின் ஓரம் உயிரிழந்தார். மற்ற இரண்டு இளைஞர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவாடானை வட்டாட்சியர் செந்தில்வேல் முருகன் விசாரணை நடத்தினார். மேலும் தொண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.