

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வடகிழக்குப் பருவ மழையால் வெள்ளக்காடாயின. கனமழை காரணமாகத் தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள 14,138 பாசன ஏரிகளில் தமிழகத்தில் 8,718 ஏரிகள் நிரம்பின்.
கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்கள், மழையின் கோர தாண்டவ பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்துள்ளனர். நேற்று முதலே மீண்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்னையில் காலையிலிருந்து விட்டுவிட்டு ஆங்காங்கே மழை பெய்தது. இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு மழை உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் நா.புவியரசன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக டிசம்பர் 12,13,14 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
டிசம்பர் 15, 16 தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, வட கடலோர மாவட்டங்களில் மிதமான அளவில் மழை பெய்தது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது''.
இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.