Published : 12 Dec 2021 03:48 PM
Last Updated : 12 Dec 2021 03:48 PM

காரைக்காலில் இந்திய முறை மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை: அமைச்சர் சந்திர பிரியங்கா தகவல் 

காரைக்காலில் இந்திய முறை மருத்துவமனை செயல்பட்டு வரும் கட்டிடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா.

காரைக்கால் 

காரைக்காலில் மிகவும் சிதிலமைடைந்த, பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்திய முறை மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்த இந்திய முறை மருத்துவமனை அதன் பின்னர் வேறு சில இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது காரைக்கால் பாரதியார் வீதியில், நகராட்சி திருமண மண்டபத்துக்கு அருகில் உள்ள பயன்பாடற்று இருந்த நகராட்சி விடுதிக் கட்டிடத்தில் தற்போது இம்மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஏராளமானோர் காரைக்கால், தமிழகப் பகுதிகளிலிருந்து சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அக்கட்டிடம் மிகவும் சிதிலமடைந்த நிலையில், கட்டிடத்தின் மேல் செடிகள் வளர்ந்து, மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து காணப்படுகின்றன.

தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் மேலும் பாதிப்படைந்தது. இதனால் மருத்துவர்களும், நோயாளிகளும் அங்கு வந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். அதனால் உடனடியாக இம்மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா, நலவழித்துறை துணை இயக்குநர் சிவராஜ்குமார், துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் ஆகியோருடன் இன்று (டிச.12) இம்மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டிடத்தின் தன்மை, அங்கு நிலவும் இடர்ப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சித்த மருத்துவ அதிகாரி தியாகராஜன், ஹோமியோதி மருத்துவர் சேவற்கொடியோன் ஆகியோர் தேவைகள் குறித்து அமைச்சருக்கு எடுத்துக் கூறினர்.

அப்போது, இம்மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் 2 மாற்று இடங்களைத் தெரிவித்து, 10 நாட்களுக்குள் அந்த இடங்களைப் பார்வையிட்டு உகந்ததாக இருக்குமா எனத் தெரிவிக்குமாறு மருத்துவர்களிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.

காரைக்காலில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய ஆயுஷ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சரிடம் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x