2 தவணை தடுப்பூசி கட்டாயம் உத்தரவு வாபஸ்: மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம்

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் |  கோப்புப்படம்.
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் | கோப்புப்படம்.
Updated on
1 min read

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்திற்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் வெளியிட்ட உத்தரவு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கரோனா 3-வது அலையைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அனுமதிக்கப்படுவார்கள் என நேற்று (சனிக்கிழமை) கோயில் நிர்வாகம் அறிவித்தது.

தமிழகத்தில் பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளதைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்குப் பொது இடங்களில் இனி வரும் காலங்களில் அனுமதி இல்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட உத்தரவில், ''2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கோயிலுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தது.

நிர்வாகக் காரணங்களுக்காகத் தற்போது இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் சார்பாக இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''கரோனா நோய் 3-வது அலை தொற்றுத் தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வழிகாட்டுதல்படி கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் டோஸ் செலுத்தியவர்கள் மட்டுமே 13.12.2021ஆம் தேதி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கோயில் மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்பு நிர்வாகக் காரணங்களுக்காகத் திரும்பப் பெறப்படுகிறது. மேலும் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.''

இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in