Published : 12 Dec 2021 11:56 AM
Last Updated : 12 Dec 2021 11:56 AM

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு; தொலைதூரங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு: தேர்வெழுத முடியாமல் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு

பிரதிநிதித்துவப் படம்.

கரூர்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்குத் தொலைதூரங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் தேர்வு மையத்திற்கு தாமதமாகச் சென்றதால் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஏராளமான விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மையங்களில் பாலிடெக்னிக் விரிவுரையாளருக்கான (டிஆர்பி) தேர்வு இன்று (டிச.12-ம் தேதி) நடைபெறுகிறது. இத்தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிலையில் அதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த நவ.28-ம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பதாரர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து தொலைத்தூரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (டிச.12-ம் தேதி) தேர்வு அறிவிக்கப்பட்டது.

ஆனால், இம்முறையும் விண்ணப்பதாரர்களின் வசிப்பிடத்தில் இருந்து தொலைதூரங்களிலே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் பலர் தேர்வுக்குச் செல்ல முடியாத நிலையிலும், தேர்வுக்குச் சென்றவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்குச் செல்ல முடியாததால் தேர்வு எழுத முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இத்தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை ஒரு பிரிவுக்கும், மதியம் மற்றொரு பிரிவுக்கும் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறுவதால் காலை தேர்வுக்கு வரவேண்டிய விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கு மேல் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

இதனால் திருச்சி, புதுக்கோட்டை, தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர் கூறுகையில், ''தொலைதூரத் தேர்வு மைய ஒதுக்கீடு பிரச்சினை காரணமாகத் தேர்வினை ஒத்திவைத்த நிலையில் மீண்டும் இரு வாரங்களில் அதேபோல தொலைதூரத் தேர்வு மையங்களில் தேர்வினை நடத்தியது ஏன் எனத் தெரியவில்லை. புதுக்கோட்டையில் இருந்து 4 மணி நேரம் பயணம் செய்து கரூர் வந்தேன். அங்கிருந்து ஆட்டோவில் ரூ.400 கட்டணம் செலுத்தி காலை 9.05 மணிக்குத் தேர்வு மையம் வந்தேன். ஆனால், அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அருகேயுள்ள திருச்சியில் உள்ள தேர்வு மையத்தை ஒதுக்காமல் கரூர் மையத்தை எனக்கு ஒதுக்கியதால் இத்தனை தூரம் பயணம் செய்து, பணம் செலவுசெய்தும் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது. எனவே தொலைதூரத் தேர்வு மையம் ஒதுக்கியவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்க வேண்டும்'' என்றார்.

இவரைப் போல பலவிண்ணப்பதாரர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் இதனைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x