திருமயம் அருகே நடந்த விபத்தில் பேருந்து எரிந்த காட்சி.
திருமயம் அருகே நடந்த விபத்தில் பேருந்து எரிந்த காட்சி.

திருமயம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து எரிந்து நாசம்: மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி

Published on

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நேற்று இரவு (டிச.11) அரசுப் பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இளைஞர்கள் 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அரசுப் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை அருகே வடவாளம் ஊராட்சி சின்னையா சத்திரத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் செல்வம் என்ற முருகானந்தம் (22). சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அன்சாரி தெருவைச் சேர்ந்தவர் கலையரசன் மகன் மணிகண்டன் (22).

நண்பர்களான இவர்கள் இருவரும், சின்னையா சத்திரத்திலிருந்து காரைக்குடிக்கு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

சாலை விபத்தில் எரிந்த பேருந்தின் தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்
சாலை விபத்தில் எரிந்த பேருந்தின் தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்

திருமயம் அருகே பாம்பாற்றுப் பாலம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனமும் எதிரே வந்த ராமேசுவரம்-ஈரோடு அரசுப் பேருந்தும் மோதிக்கொண்டன.

இதில், இருசக்கர வாகனம் பேருந்தின் உள்பகுதிக்குள் சிக்கிக்கொண்டது. விபத்தில் சிக்கிய மணிகண்டன், முருகானந்தம் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்துத் தீப்பிடித்ததில் அரசுப் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.

அதிர்ஷ்டவசமாக அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு இறங்கி உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் குறித்து திருமயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in