

ஆப்கன் மக்களுக்குச் செய்த உதவிகள் என்ன? என்று மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
1. உள்நாட்டுப் போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதற்காக, தலிபான்களுடன் இந்திய அரசு அதிகாரிகள் பேசி வருகின்றார்களா?
2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்.
3. கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான திட்டம் ஏதும் உள்ளதா?
4. ஆப்கானிஸ்தான் நாட்டுடன் தூதரக உறவுகளை மேம்படுத்துவதற்கும், வணிகம் குறித்தும் ஏதேனும் திட்டங்கள் உள்ளதா?
5. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள் தருக என்று நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டி வைகோ கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் விளக்கம் அளிக்கும்போது, ''இந்தியாவின் நீண்டகால நண்பன் என்ற முறையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் சீர்குலைவுகள் குறித்து, மனிதாபிமான அடிப்படையில் இந்தியா கவலை கொண்டுள்ளது.
ஆப்கன் மக்களுடன் கொண்டுள்ள உறவுகள் மற்றும் ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்பு சபை தீர்மானம் 2593 ஆகியவை, அந்த நாட்டுடன், இந்தியா மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைக்கு வழிகாட்டும். அதன்படி, 50000 மெட்ரிக் டன் கோதுமை, உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் கோவிட் தடுப்பு மருந்துகளை, மனிதாபிமான அடிப்படையில், ஐ.நா. மன்றத்தின் சார்பு நிறுவனங்களுடன் இணைந்து, ஆப்கன் மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா உறுதி அளித்து இருக்கின்றது'' என்று தெரிவித்தார்.
இவ்வாறு மதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.