

உபகரணங்கள் கொள்முதல் மற்றும் நிதி மோசடி விவகாரத்தில் விளக்கம் கேட்டு அண்ணா பல்கலை.க்கு தணிக்கைத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய தணிக்கைத் துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிகுமாருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆவணங்கள் ஆய்வு
பல்கலை.யின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் மல்ட்டி மீடியா ஆய்வு மையத்தின் 2012 முதல் 2020-ம் ஆண்டு வரையான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது மையத்தின் இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.கவுரிக்கு, மத்திய கல்வி அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் பணிக்காலத்தில் நிதி மேலாண்மையில் முறைகேடு, காசோலை மோசடி, உரிய அனுமதியின்றி விதிகளை மீறி உபகரணங்கள் கொள்முதல் செய்தது உள்ளிட்டவை தொடர்பாக ரூ.2.92 கோடிக்கு குளறுபடிகள் நடைபெற்றுள்ளன.
அதேபோல், 2017-க்குப் பின்மல்ட்டி மீடியா ஆய்வு மையத்தின் அனுமதியும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உரிய விளக்கத்தை உடனே சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2020-ம் ஆண்டுவரை மல்ட்டி மீடியா மையத்தின் இயக்குநராக இருந்த கவுரி,தற்போது சென்னை பல்கலை. துணைவேந்தராக பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.